ரெயில்முன் பாய்ந்து அரசு பஸ் டிரைவர் தற்கொலை

மகனுக்கு ஆசை, ஆசையாக முத்தமிட்டபடி வெளியே சென்ற அரசு பஸ் டிரைவர் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:
மகனுக்கு ஆசை, ஆசையாக முத்தமிட்டபடி வெளியே சென்ற அரசு பஸ் டிரைவர் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அரசு பஸ் டிரைவர்
குழித்துறை ரெயில் நிலையம் அருகே நேற்றுமுன்தினம் இரவு ரெயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டவர் மார்த்தாண்டம் வெட்டுவெந்நி பகுதியை சேர்ந்த வினுகுமார் (வயது 47) என்பதும், நாகர்கோவில் செட்டிகுளம் பணிமனையில் அரசு பஸ் டிரைவராக பணியாற்றியதும் தெரியவந்தது.
குடும்ப பிரச்சினை
வினுகுமார் மனைவி சுஷ்மிதா (42). இவர்களுக்கு அனு கீர்த்தி (15) என்ற மகளும், சர்வேஸ் (6) என்ற மகனும் உள்ளனர். சுஷ்மிதா ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்த நிலையில் விவாகரத்து பெற்று 2-வதாக வினுகுமாரை மணமுடித்துள்ளார். இதில் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை அனுகீர்த்தி ஆவார்.
இதற்கிடையே வினுகுமாருக்கும், சுஷ்மிதாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வினுகுமார் தனது உறவினர் ஒருவரிடம் என்னுடைய வாழ்க்கையில் பல பிரச்சினைகள் உள்ளது என்றும், இதனால் வாழ்க்கையே பிடிக்கவில்லை எனவும் கூறி அழுதுள்ளார்.
உடனே அந்த உறவினர் அவருக்கு ஆறுதல் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மகனுக்கு முத்தமிட்டு தற்கொலை
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் வீட்டில் இருந்த வினுகுமார் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்தார். அப்போது தனது மகன் சர்வேஸை மடியில் அமர வைத்து கட்டியணைத்தபடி முத்தமிட்டார். மேலும் அவர் வாங்கி வைத்திருந்த மிட்டாய்களை மகனுக்கு ஆசை, ஆசையாக கொடுத்தார். அப்போது நன்றாக படிக்க வேண்டும் என அவர் மகனிடம் கூறியுள்ளார். இதனை கண்ட சுஷ்மிதா, வினுகுமாரின் நடவடிக்கையில் மாற்றம் உள்ளதை அறிந்து எதுவும் பிரச்சினையா? என கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு வினுகுமார் பதில் அளிக்காமல், நண்பரின் வீட்டு திருமணத்துக்கு செல்வதாக கூறி புறப்பட்டு வெளியே சென்றார். ஆனால் அவர் கூறியபடி அங்கு செல்லாமல் குழித்துறை ரெயில் நிலையம் அருகே சென்று ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அதாவது தண்டவாளத்தில் நின்றபடி சாமி கும்பிட்டபடியே அவர் ஓடி வந்து எதிரே வந்த ரெயில் மீது பாய்ந்ததாக ரெயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.
அரசு பஸ் டிரைவர் ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.