கலெக்டர் அலுவலகத்தில் அரசு பஸ் டிரைவர் தீக்குளிக்க முயற்சி


கலெக்டர் அலுவலகத்தில் அரசு பஸ் டிரைவர்  தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 9:06 PM IST)
t-max-icont-min-icon

பணி வழங்காததைக் கண்டித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் அரசு பஸ் டிரைவர் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

பணி வழங்காததைக் கண்டித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் அரசு பஸ் டிரைவர் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு பஸ் டிரைவர்

நாகர்கோவிலை அடுத்த சுங்கான்கடை அருகில் உள்ள பரசேரியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 49). இவர் 1996-ம் ஆண்டு முதல் அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டலத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். தற்போது மார்த்தாண்டம் பணிமனையில் சிறு வாகன ஓட்டுனராக (சிறப்புநிலை ஓட்டுனர்) பணியாற்றினார். 2003-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தால் 2008-ம் ஆண்டு முதல் நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மத்திய தொழில்கூடத்தில் இலகுரக வாகன ஓட்டுனராக பணியாற்றினார். அதன்பிறகு சிறுவாகன டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த அக்டோபர் மாதம் ஜீப்பில் பழுது பார்க்கும் பணி மேற்கொள்ள இருப்பதால் பணி இல்லை என்று அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. இதனால் நாகர்கோவில் ராணிதோட்டம் தலைமை அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இதையடுத்து கடந்த 9-ந் தேதி குடும்பத்தோடு சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றார். அப்போது போலீசார் அஜித்குமாரையும், அவரது குடும்பத்தினரையும் கைது செய்தனர்.

தீக்குளிக்க முயற்சி

இதன்பிறகும் அவருக்கு பணி வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த அவர் நேற்று காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் மண்எண்ணெய் கேனையும், தி.மு.க. கட்சி கொடியையும் கையோடு கொண்டு வந்திருந்தார். பின்னர் அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்வாயில் முகப்பு அருகே நின்று கொண்டு, தான் வைத்திருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதைப்பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடிவந்து அஜித் குமார் கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனையும், தீப்பெட்டியையும் பறித்தனர். பின்னர் அவருடைய உடலில் மண்எண்ணெய் ஊற்றப்பட்டு இருந்ததால், போலீசார் தண்ணீரை அவரது உடலில் ஊற்றினர். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

புகார்

இதற்கிடையே அஜித்குமார் நேசமணிநகர் போலீஸ் நிலையத்துக்கு ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில் எனக்கு ஓட்டுனர் பணி வழங்காமல் என்னை அவமானப்படுத்தி, தற்கொலைக்கு தூண்டிய அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் மீதும், தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

இந்தநிலையில் கலெக்டர் அலுவலகத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும், தற்கொலைக்கு முயன்றதாகவும் அஜித்குமார் மீது ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story