அரசு பஸ்-லாரி மோதல்; 17 பேர் படுகாயம்


அரசு பஸ்-லாரி மோதல்; 17 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 May 2023 12:30 AM IST (Updated: 29 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே, அரசு பஸ்-லாரி மோதிய விபத்தில் பயணிகள் உள்பட 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

அரசு குளிர் சாதன பஸ்

திருச்சியில் இருந்து தேனி நோக்கி அரசு விரைவு குளிர்சாதன பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை, தேனி பூதிபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 46) என்பவர் ஓட்டினார். கண்டமனூரை சேர்ந்த செல்வகுமார் (46) என்பவர் கண்டக்டராக இருந்தார்.

அந்த பஸ்சில் சுமார் 50 பேர் பயணம் செய்தனர். திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், வடமதுரை அருகே உள்ள டி.என்.பாறைப்பட்டி பிரிவு பகுதியில் பஸ் வந்தது.

17 பேர் படுகாயம்

அப்போது மூனாண்டிபட்டியில் இருந்து தவிடு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை சங்ககிரி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (45) என்பவர் ஓட்டினார். அந்த லாரி திடீரென தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கடந்து சென்றது.

அந்த சமயத்தில் அரசு பஸ், அந்த லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பஸ் டிரைவர் செந்தில்குமார், கண்டக்டர் செல்வகுமார் மற்றும் பஸ்சில் பயணம் செய்த திருச்சி செம்பட்டு பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது (35), அவருடைய மனைவி ஆயிஷா பேகம் (34), அவரது மகன் முகமது அஜீஸ் (14), தேனி அரண்மனைபுதூரை சேர்ந்த ராஜா (60), திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த மரியஜோசப் (51), மயிலாடுதுறையை சேர்ந்த சுதாகர் (32), ராஜேஷ் (33) உள்பட 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை போலீசார் சீரமைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story