இரவில் கோவில் வரை இயக்கப்படாத அரசு பஸ்கள்; பயணிகள் தவிப்பு
ராமேசுவரத்திற்கு இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து வரும் அரசு பஸ்கள் கோவில் வரை இயக்கப்படாததால் பயணிகள் தவிக்கும் நிலை உள்ளது.
ராமேசுவரம்,
ராமேசுவரத்திற்கு இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து வரும் அரசு பஸ்கள் கோவில் வரை இயக்கப்படாததால் பயணிகள் தவிக்கும் நிலை உள்ளது.
கலெக்டர் உத்தரவு
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள் பஸ் நிலையத்திலேயே நிறுத்தப்படும். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பஸ் நிலையத்திலிருந்து ராமேசுவரம் கோவில் வரை இயக்கப்படும் டவுன் பஸ்களில் ஏறி வருகின்றனர். அதிகாலை 5 மணியில் இருந்து இரவு 9 மணி வரை மட்டுமே கோவில் வரை டவுன் பஸ்கள் இயக்கப்படும்.
இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வெளியூர்களிலிருந்து ராமேசுவரம் வரும் அனைத்து அரசு பஸ்களும் கோவில் வரை வந்து பயணிகளை இறக்கிவிட்டு செல்ல வேண்டும் என்று கலெக்டர் மற்றும் போக்குவரத்து கழக கோட்ட மேலாளரின் உத்தரவும் உள்ளது.
பயணிகள் தவிப்பு
இந்த நிலையில் ராமேசுவரத்திற்கு வெளியூர்களில் இருந்து இரவு வரும் பல பஸ்கள் ராமேசுவரம் கோவில் வரை வருவது கிடையாது என பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் இரவில் பக்தர்கள் பஸ் நிலையத்தில் இருந்து கூடுதல் பணம் செலவழித்து ஆட்டோவில் கோவில் அருகே உள்ள தங்கும் விடுதிகளுக்கு செல்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12.20 மணிக்கு பட்டுக்கோட்டையில் இருந்து ராம்நாதபுரம் வந்த அரசு பஸ் ராமேசுவரத்திற்கு புறப்பட்டது. நள்ளிரவு 1.30 மணிக்கு ராமேசுவரம் வந்த பஸ் கோவில் வரை செல்லாமல் பஸ் நிலையத்திலேயே அனைத்து பயணிகளும் இறக்கிவிடப்பட்டனர்.
இதனால் பயணிகள் பரிதவித்தனர். மேலும், அந்த பஸ்சில் வந்த பக்தர்கள் பலர் கோவில் வரை 5 கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே சென்றனர். கலெக்டரின் உத்தரவு இருந்தும் அந்த உத்தரவை கூட பல அரசு பஸ் டிரைவர், கண்டர்கள் பின்பற்றுவது இல்லை.
எனவே, இரவு நேரங்களில் ராமேசுவரம் வரும் அனைத்து அரசு பஸ்களும் கோவில் வரை வந்து பயணிகளை இறக்கிவிட்டு செல்வதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.