நிறுத்தங்களில் முறையாக நிற்காமல் ஓடும் அரசு பஸ்கள்; பயணிகள் கருத்து


நிறுத்தங்களில் முறையாக நிற்காமல் ஓடும் அரசு பஸ்கள்; பயணிகள் கருத்து
x
தினத்தந்தி 18 Sept 2023 2:45 AM IST (Updated: 18 Sept 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்கள், நிறுத்தங்களில் முறையாக நிற்காமல் செல்வதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 650 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவைகளில் தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் நகர் பகுதியில் ஓடும் பஸ்களில் பல அதற்கான நிறுத்தங்களில் முறையாக நிறுத்தப்படுவது இல்லை. பஸ் நிறுத்தங்களில் இருந்து 100 அடிகளுக்கு முந்தியோ அல்லது 100 அடிகளுக்கு பிந்தியோ தான் நிறுத்தப்படுகின்றன.

இதனால் பஸ் நிறுத்தத்தில் இருந்து 100 அடிகள் தள்ளி நிற்கும் பஸ்களில் ஏறுவதற்காக பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஓடும் நிலை உள்ளது. அப்போது அவர்கள் தவறி கீழே விழுந்து காயப்படும் நிலை ஏற்படுகிறது என்ற புகார்கள் எழுந்துள்ளன.

இதுபற்றி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

சிரமப்படும் பயணிகள்

ஜெசிந்தாமேரி (தனியார் நிறுவன ஊழியர், ராமையன்பட்டி):- நான் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறேன். தினமும் காலையில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ராமையன்பட்டி பஸ் நிறுத்தம் வந்து தான் திண்டுக்கல்லுக்கு பஸ்சில் வருவேன். காலை, மாலை நேரத்தில் இந்த பஸ் நிறுத்தத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

அந்த நேரத்தில் பஸ்கள் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் 100 அடிகள் தள்ளிச்சென்று நிறுத்தப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கியபடி ஓடிச்சென்று பஸ்களில் ஏறும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதேபோல் இரவில் 8.30 மணிக்கே திண்டுக்கல் பஸ் நிலையம் வந்தால் தான் எங்கள் ஊருக்கு செல்லும் பஸ்கள் கிடைக்கும். இந்த பிரச்சினைகளை தவிர்க்க வேண்டும் என்றால் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்

சரவணாசெல்வி (தனியார் நிறுவன ஊழியர், திண்டுக்கல்):- திண்டுக்கல்லில் இருந்து புறநகருக்கு இயக்கப்படும் பஸ்களில் தினமும் அதிக அளவில் பயணிகள் கூட்டம் இருக்கிறது. படிக்கட்டுவரை பயணிகள் நின்றபடி பயணிக்கின்றனர். இதனால் புறநகர் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்களில் காத்திருப்பவர்கள் அந்த பஸ்களில் ஏற முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது.

மேலும் பஸ்களும் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் 100 அடி தள்ளி நிறுத்தப்படுவதால் பயணிகள் பஸ்சில் ஏறமுடியாமல் தவற விடுகின்றனர். இதனால் என்னைப்போன்று தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் அலுவலகங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே கூடுதல் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகளை நியமிக்க வேண்டும்

சக்திவேல் (கல்லூரி மாணவர், நத்தம்):- புறநகரில் செயல்படும் கல்லூரிகளில் படிக்கும் என்னைப்போன்ற மாணவர்கள் அரசு பஸ்களை தான் பெரிதும் நம்பி இருக்கின்றனர். காலை, மாலை நேரத்தில் பயணிகள் கூட்டம் அதிகம் இருப்பதால் பஸ் நிறுத்தங்களில் சில பஸ்கள் நிற்காமல் சற்று தூரம் தள்ளிச்சென்று நிற்கிறது.

ஆனாலும் கல்லூரிக்கு குறித்த நேரத்துக்குள் செல்ல வேண்டும் என்பதால் நாங்கள் ஓடிச்சென்று அந்த பஸ்களில் ஏறி பயணிக்கிறோம். பஸ்சுக்குள் இடம் கிடைக்காவிட்டாலும் படிக்கட்டுக்களில் நின்று ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலையே பெரும்பாலும் ஏற்படுகிறது. சில பஸ் நிறுத்தங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் நின்று கண்காணிப்பில் ஈடுபடுவதை போல், பஸ் நிறுத்தத்தில் முறையாக பஸ்கள் நிறுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்கவும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

கார்த்திக் (கல்லூரி மாணவர், நத்தம்):- புறநகரில் இயக்கப்படும் அரசு பஸ்கள் பலவும், பஸ் நிறுத்தங்களில் முறையாக நிறுத்தப்படுவதில்லை. பஸ் நிறுத்ததுக்கு சில அடி தூரத்துக்கு முன்போ அல்லது சில அடி தூரத்துக்கு பின்போ நிறுத்தப்படுகிறது. புத்தகப்பைகளை தூக்கிக்கொண்டு அந்த பஸ்களை பிடிக்க செல்வதற்குள் பஸ்கள் புறப்பட்டு சென்றுவிடுகின்றன. இதனால் கல்லூரிக்கு காலதாமதமாக செல்லும் நிலை ஏற்படுகிறது. மேலும் அரசு பஸ்கள் சென்றுவிடுவதால் பஸ் பாஸ் வைத்திருந்தும் தனியார் பஸ்களில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கெட்டபெயர்

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பெயர் வெளியிட விரும்பாத பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் கூறும் போது, "பயணிகளை பாதுகாப்பாக அழைத்து செல்வதற்குத்தான் அதிகம் முன்னுரிமை தருகிறோம். பயணிகள் பாதிக்கப்பட்டால் எங்களுக்கும் தண்டனை அதிகமாக தரப்படுகிறது. பயணிகளை ஓடவிட்டு அவர்கள் சாலையில் விழுந்து காயமடைந்தால் போக்குவரத்து கழகத்துக்குத்தான் நஷ்டம் என்பதை நாங்கள் அறிவோம். ஒருசிலர் செய்யும் செயலால் அனைவருக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் பயணிகள் கேட்டுக் கொள்வதால் பஸ் நிறுத்தம் இல்லாத இடங்களில் கூட பஸ்களை நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக இறக்கி விட்டுச் செல்லும் டிரைவர்களும் இருக்கிறார்கள். பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தவறுகள் இருப்பின், அதனை அதிகாரிகள் தான் சரிசெய்ய வேண்டும்" என்றனர்.

புகார் எண்கள்

போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, "மாவட்டத்தில் இயக்கப்படும் பஸ்களில் பணியில் ஈடுபடும் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு போதிய அறிவுரைகள், பணிமனை மேலாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது. இருந்தும் ஒரு சிலர் பயணிகளிடம் வம்பு பேசுவது நிர்வாகத்தின் கவனத்திற்கு வருகிறது. பஸ்களில் புகார் செய்யும் எண்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. அவற்றில் புகார்களை தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளுக்கு சிறந்த சேவையை எப்போதும் வழங்க வேண்டும் என்பதில் அரசு போக்குவரத்து கழகம் உறுதியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து செய்யும்" என்றனர்.


Next Story