திருச்சி மாவட்டத்தில் 3 நாட்களாக அரசு கேபிள் டி.வி.ஒளிபரப்பாகவில்லை


திருச்சி மாவட்டத்தில் 3 நாட்களாக அரசு கேபிள் டி.வி.ஒளிபரப்பாகவில்லை
x

திருச்சி மாவட்டத்தில் 3 நாட்களாக அரசு கேபிள் டி.வி.ஒளிபரப்பாகவில்லை என கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் 3 நாட்களாக அரசு கேபிள் டி.வி.ஒளிபரப்பாகவில்லை என கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

மக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. திருச்சி ஆபரேட்டர்கள் சார்பில் கொடுத்த மனுவில், திருச்சியில் கடந்த 3 நாட்களாக அரசு கேபிள் டி.வி. சேனல் ஒளிபரப்பப்படவில்லை. இதனால் பொதுமக்கள் ஆபரேட்டராக இருக்கும் எங்களுக்கு போன் செய்கிறார்கள். இதனால் 3 நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறோம். அதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட அரசு கேபிள் டி.வி. அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டால் சரியான பதில் கிடைக்கவில்லை. அரசு கேபிள் டி.வி.யை நம்பி கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். மாதத்தில் 10 நாட்கள் இந்த பிரச்சினை வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

வாக்குவாதம்

அதன் பின்னர் அரசு கேபிள் டி.வி. தாசில்தார் தனலட்சுமி மற்றும் மேலாளரிடம் வாக்குவாதம் செய்தனர். அதில் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். பின்னர் அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முன்னாள் மாவட்ட செயலாளர் பத்மநாபன் கொடுத்த மனுவில், திருச்சி காவிரி பாலம் பராமரிப்பு பணிக்காக முழுவதும் மூடப்பட்டுள்ளது. தினசரி கூலி வேலை செய்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் இந்த காவிரி பாலத்தை கடந்து சென்றுதான் பிழைப்பு நடத்தி வருகிறோம். எனவே மாம்பழ சாலையில் இருந்து அண்ணாசாலை செல்வதற்கு பழைய காவிரி இரும்பு பாலத்தை திறந்து வைக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

மருத்துவமனை

திருச்சி பச்சமலை கோம்பை ஊராட்சி பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் செல்போன் கோபுரம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் மருத்துவமனை மற்றும் தார்சாலை அமைத்து தர வேண்டும் என்றுகூறியுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் கொடுத்த மனுவில், நாங்கள் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகிறோம். எங்களுக்கு நிரந்தரமாக வசிக்க இடம் இல்லாமல் தவித்து வருகிறோம். ஆதலால் எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறிஉள்ளனர்.

வீட்டுமனை பட்டா

ஸ்ரீரங்கம் வெள்ளித்திருமுத்தம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 50 வருடங்களாக வசித்து வருகிறோம். 1988-ம் ஆண்டு இந்த இடம் நகரசுத்தி தொழிலாளர்களுக்கென்று அன்றைய நகர் மன்ற தலைவர் ஸ்ரீரங்கம் 1-வது வார்டில் உள்ள மூலத்தோப்பில் முனிசிபல் காலனி என்று எங்களுக்கு இடம் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அரசு எங்களுக்கு பட்டாவை வழங்கவில்லை. எனவே எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், திருமண உதவித் தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 611 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைமேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.


Next Story