அரசு கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
விழுப்புரத்தில் அரசு கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள சகாதேவன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார் மகன் முருகவேல் (வயது 18). இவர் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இவர், கல்லூரிக்கு செல்லாமல் தனது நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதற்காக புதுச்சேரிக்கு சென்று விட்டு மீண்டும் மாலையில் வீடு திரும்பியுள்ளார். இதையறிந்த அவரது பெற்றோர், ஏன் கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருகிறாய் என்று கண்டித்தனர்.
இதனால் மாணவர் முருகவேல், கோபித்துக்கொண்டு அதே கிராமத்தில் உள்ள தனது மாமா சுரேஷ் வீட்டிற்கு சென்று அங்குள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், முருகவேலை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.