அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் தர்ணா
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி குத்தாலம் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும். மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் பல்வேறு கட்டங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டதாக சில மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த மாணவர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரியும் கல்லூரிக்கு கட்டிட வசதி உள்பட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் நேற்று முன்தினம் மாணவ-மாணவிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு மாணவ-மாணவிகள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்ததோடு மனுவும் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதனையடுத்துபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவர்களின் இந்த போராட்டம் காரணமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.