அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்
வேலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
வேலைநிறுத்த போராட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். முடக்கப்பட்ட சரண்விடுப்பை வழங்க வேண்டும், அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று வேலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அரசு அலுவலகங்களுக்கு பல்வேறு தேவைகளுக்கான சென்ற மக்கள் ஊழியர்கள் பணியில் இல்லாததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஆயிரம் பேர் பங்கேற்பு
வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்கக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். பொருளாளர் சுமதி முன்னிலை வகித்தார். துணை தலைவர்கள் தீனதயாளன், பாலமுருகன், இணை செயலாளர்கள் செபாஸ்டின், ஏழுமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
ஜாக்டோ செய்தி தொடர்பாளர் வாரா போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். மேலும் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். வேலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் சுமார் 1,000 பேர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.