கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்


கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

புதுக்கோட்டை

வேலைநிறுத்தம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட சரண்விடுப்பை வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் நேற்று பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

இதனால் அரசுத்துறையில் பல்வேறு இடங்களில் ஊழியர்கள் இருக்கைகள் காலியாக இருந்தன. புதுக்கோட்டையில் தாசில்தார் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் அரசு ஊழியர்கள் பலர் வேலைக்கு வரவில்லை.

ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தாசில்தார் அலுவலகத்தில் வாசலின் நுழைவுவாயிலேயே, அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஊழியர்கள் இல்லாததால் தாசில்தார் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் சங்கத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் நேற்று பணிக்கு செல்லவில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பொன்னமராவதி தாசில்தார் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தாசில்தார் அலுவலகத்தில் இருக்கைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் ஆலங்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பணிகள் பாதிப்பு

புதுக்கோட்டையில் தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். இந்த வேலை நிறுத்தத்தால் அரசு அலுவலகம் மற்றும் பொதுமக்கள் சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டன. அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி சென்னை கோட்டையை அரசு ஊழியர்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story