அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
தேனி பங்களாமேட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இன்று தர்ணா போராட்டம் நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மத்திய, மாநில அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், புதிய கல்வி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட தலைவர் பேயத்தேவன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட துணைத்தலைவர் முத்தையா வரவேற்றார். மாவட்ட செயலாளர் தாஜுதீன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில துணைபொதுச்செயலாளர் மங்களபாண்டியன், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில இணைச்செயலாளர் நாகலட்சுமி, தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சங்க மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் சங்க மாநில துணைச்செயலாளர் அழகுராஜா மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். இதில் அரசு ஊழியர் சங்கம், ஆசிரியர் சங்கங்கள், ஓய்வூதியர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.