அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x

தூத்துக்குடியில் அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தர்ணா போராட்டம்

தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகே அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்தூர் ராஜன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சின்னத்தம்பி, இணை செயலாளர் உமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் சாம்டேனியல் ராஜ் வரவேற்றார்.

மாநில துணை பொதுச்செயலாளர் என்.வெங்கடேசன் தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்தார். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரசல், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு துணை தலைவர் சாமிநாதன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில செயற்குழு உறுப்பினர் ஆனந்தி, மூட்டா பொதுச்செயலாளர் எம்.நாகராஜன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கோரிக்கைகள்

அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, எம்.ஆர்.பி. ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணி இடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். தொழிலாளர் நல உரிமையை பறிக்கக்கூடாது. புதிய கல்வித்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.

தர்ணா போராட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநில செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில செயலாளர் பேச்சியம்மாள், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட இணை செயலாளர் ஞானராஜ், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மகேந்திர பிரபு, சத்துணவு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் தமிழரசன், வணிகவரி பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சங்கர், கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் மனோகரன், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story