அரசு ஊழியரின் மனைவி தற்கொலை
பண்ருட்டி அருகே அரசு ஊழியரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக, அவருடைய தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
பண்ருட்டி,
ஆயுதப்படை அலுவலகத்தில் பணி
பண்ருட்டி அருகே உள்ள அன்னங்காரன் குப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவரது மனைவி உஷா (35). திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். சக்திவேல் உளுந்தூர்பேட்டையில் உள்ள 10-வது சிறப்பு ஆயுதப்படை அலுவலகத்தில் இளநிலை ஊழியராக வேலை பார்த்து வந்தார். சக்திவேலுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு சக்திவேல் மது குடித்துவிட்டு வந்து உஷாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
சாவில் சந்தேகம்
இதனால் மனமுடைந்த உஷா நேற்று தனது வீட்டின் அருகில் உள்ள முந்திரி தோட்டத்திற்கு சென்று, அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உஷாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து இறந்த உஷாவின் தந்தை முருகன் (60) போலீசில் அளித்த புகாரில், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.