நெல்லையில் அரசு பொருட்காட்சி; அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்
நெல்லையில் அரசு பொருட்காட்சியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று திறந்துவைத்தார்.
நெல்லையில் அரசு பொருட்காட்சியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று திறந்துவைத்தார்.
அரசு பொருட்காட்சி
நெல்லையில் ஆண்டுதோறும் நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டத்தை ஒட்டி பொருட்காட்சி நடத்துவது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொருட்காட்சி நடத்தப்படவில்லை. இந்தநிலையில் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நெல்லையில் இந்த ஆண்டு பொருட்காட்சி நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் அடிப்படையில் வ.உ.சி. மணிமண்டபம் பின்புறம் தனியாருக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்து அங்கு பொருட்காட்சி அமைக்கப்பட்டது. அரசின் வேளாண்துறை, வனத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பிலும் அங்கு 31 அரங்குகள், 19 கடைகள், 11 உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ ராட்டினங்கள், துரித உணவு கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்காட்சி தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு செய்தி-மக்கள் தொடர்பு துறை செயலாளர் மகேஷ் காசிராஜன் தலைமை தாங்கினார். அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பொருட்காட்சியை திறந்து வைத்தார். சபாநாயகர் அப்பாவு அரசு துறை அரங்குகளை திறந்து வைத்தார்.
நலத்திட்ட உதவி
பின்னர் நடந்த விழாவில் கலெக்டர் விஷ்ணு வரவேற்று பேசினார். அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் கலந்து கொண்டு 699 பேருக்கு ரூ.3 கோடியே 99 லட்சத்து 1619 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், "தமிழக அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பொருட்காட்சியில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இங்கு வந்து பார்த்து அரசு திட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே 3 இடங்களில் பொருட்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் வந்து பார்த்து சென்றுள்ளனர். இந்த பொருட்காட்சி 45 நாட்கள் நடக்கிறது" என்றார்.
சபாநாயகர் அப்பாவு பேசுகையில், "தமிழக அரசு மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்லூரி மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. இதேபோல் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளது. ராதாபுரம் தொகுதியில் அரசு உதவி பெறும் 288 பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
கலந்துகொண்டவர்கள்
விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல்வகாப், டாக்டர் சதன் திருமலைகுமார், செய்தி-மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஜெயசீலன், மேயர் பி.எம்.சரவணன், மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், ரேவதி பிரபு, மகேஸ்வரி, தி.மு.க. மாநகர துணைச்செயலாளர் மூளிகுளம் பிரபு, தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், பழனிவேல் பாண்டியன், நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர், மாநகராட்சி உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் லெனின், சுற்றுலா அலுவலர் சீத்தாராமன், தி.மு.க. இளைஞர் அணி சி.ஆறுமுகராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் ஜெயஅருள்பதி நன்றி கூறினார்.