அரசு ஆஸ்பத்திரி கழிவுநீர் ஆற்றில் கலக்கிறது; குழித்துறை நகராட்சி கூட்டத்தில் குற்றச்சாட்டு


அரசு ஆஸ்பத்திரி கழிவுநீர் ஆற்றில் கலக்கிறது; குழித்துறை நகராட்சி கூட்டத்தில் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 Sept 2023 12:15 AM IST (Updated: 30 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குழித்துறை அரசு ஆஸ்பத்திரி கழிவுநீர் ஆற்றில் கலப்பதாக குழித்துறை நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

கன்னியாகுமரி

குழித்துறை,

குழித்துறை அரசு ஆஸ்பத்திரி கழிவுநீர் ஆற்றில் கலப்பதாக குழித்துறை நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

நகராட்சி கூட்டம்

குழித்துறை நகராட்சி கூட்டம் தலைவர் பொன் ஆசை தம்பி தலைமையில் நடைபெற்றது. ஆணையர் ராமதிலகம், என்ஜினீயர் குறள் செல்வி, மேலாளர் செண்பக நாச்சியார், துணைத்தலைவர் பிரவின் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் தங்களுடைய வார்டின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஆஸ்பத்திரி கழிவுநீர் ஆற்றில்...

ரோஸ்லெட் (காங்):- குழித்துறை அரசு ஆஸ்பத்திரி கழிவுநீர் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையர்:- உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரோஸ்லெட்:- இப்போதும் கழிவுநீர் கலக்கிறது.

ஆணையர்:- இதுகுறித்து சப்-கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

மினி குமாரி (பா.ஜ.க):- எனது வார்டில் தெருவிளக்கு போட மனு கொடுத்து ஒரு வருடமாகியும் எந்த பணியும் நடைபெறவில்லை.

தலைவர்:- மின்விளக்குகள் வந்து விட்டது. உடனே பொருத்தப்படும்.

மினி குமாரி:- எனது வார்டில் சில இடங்களில் பைப் லைன் பொருத்தப்படவில்லை.

ரவி (பா.ம.க.):- அனைத்து வார்டுகளிலும் குடிநீர் குழாய் பணி நிறைவடையவில்லை. அதிவேக நடவடிக்கை தேவை. இதே நிலை நீடித்தால் 2 வருடம் கடந்தாலும் புதிய குடிநீர் திட்ட பணிகள் நிறைவடையாது. இதே கோரிக்கையை ஜெயின் சாந்தி (சுயேச்சை), சர்தார் ஷா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) கவுன்சிலர்களும் வலியுறுத்தினர்.

ஆணையர்:- பைப் லைன் பணி முடிந்து விட்டதாக காண்டிராக்டர் எதுவும் சொல்லவில்லை.

தலைவர்:-காண்டிராக்டருக்கு கொடுக்க வேண்டிய பணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பணியை முடித்த பிறகு தான் பணம் கொடுக்கப்படும்.

போதைப்பொருள் பயன்படுத்தும் இடம்

ரெத்தினமணி (பா.ஜ.க.):- மார்த்தாண்டம் மேம்பாலத்தில் இருந்து மழை நீர் கீழ்பகுதியில் அருவி போல் கொட்டுகிறது. இதை பராமரிக்க தேவையான ஏணியோ, உபகரணங்களோ, ஊழியர்களோ நம்மிடம் இல்லை. மேம்பால தெருவிளக்குகளும் சரியாக எரியவில்லை.

சர்தார்ஷா:-பழைய தியேட்டர் சந்திப்பு அருகே மழை நீர் பாய்ந்து ரோடு பல்லாங்குழியாக உள்ளது.

தலைவர்:- பழைய தியேட்டர் பகுதியில் நகராட்சி சார்பில் சாலையை சீரமைக்கலாமா?

ஆணையர்:-அது நெடுஞ்சாலை துறை ரோடு.அதை நாம் சரி செய்ய முடியாது. இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம். இருப்பினும் நாம் தெரு விளக்குகளை சீரமைத்து வருகிறோம்.

விஜு (பா.ஜ.க.):- குழித்துறை வி.எல்.சி. மைதானம் இரவு நேரங்களில் போதை பொருட்கள் பயன்படுத்தும் இடமாக உள்ளது. போலீசார் அவ்வப்போது வந்து சோதனையிட்டு செல்கின்றனர். எனவே அந்த பகுதியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.

ஆட்லின் கெனில் (காங்):- குழித்துறை ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவுகிறது. இதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.

ஆணையர்:- ஒவ்வொரு வார்டு பகுதியிலும் வீடுகளில் இருந்து கழிவுநீர் வடிகாலுக்கு வருவது அடைக்கப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளிலும் அடைக்கப்பட்ட பிறகு முழுமையாக கட்டுப்படுத்தப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story