அரசு மதுபானக்கடை விற்பனையாளர் தூக்கிட்டு தற்கொலை


அரசு மதுபானக்கடை விற்பனையாளர் தூக்கிட்டு தற்கொலை
x

அண்ணனுக்கு மருத்துவ சிகிச்சை செய்ய பணம் இல்லாத மனவேதனையில் அரசு மதுபான கடை விற்பனையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கரூர்

மனவேதனை

கரூர் மாவட்டம், குளித்தலை தண்ணீர்பள்ளி சேடர் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 45). இவர் குளித்தலை அருகே உள்ள வை.புதூர் அரசு மதுபானக்கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ராதா(39). இவர்களுக்கு ஸ்ரீ ஹரி(12), நித்யஸ்ரீ(9) என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். அதே பகுதியில் கோபாலகிருஷ்ணனின் அண்ணன் மோகன்குமார்(48) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

மோகன்குமாருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவ சிகிச்சை செய்துள்ளனர். இருப்பினும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லையாம். தனது அண்ணன் மோகன்குமார் சிகிச்சைக்காக கோபாலகிருஷ்ணன் செலவுகளை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் மருத்துவ சிகிச்சைக்கு போதுமான பணம் தயார் செய்து மருத்துவம் பார்க்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தற்கொலை

இதனால் ஏற்பட்ட மன வேதனை காரணமாக கோபாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தனக்குத்தானே தூக்கிட்டு கொண்டிருந்துள்ளார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். தனது கணவர் இறந்தது குறித்து ராதா அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story