25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் அரசு அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்
25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் அரசு அலுவலர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றியத்தின் சார்பில் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. அதன்படி சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சேலம் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
நாமக்கல் மாவட்ட தலைவர் நவலடி முன்னிலை வகித்தார். தர்மபுரி மாவட்ட தலைவர் குமார் வரவேற்றார். உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் குமார் தொடங்கி வைத்தார். அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி மத்திய அரசு அறிவித்த அதே நாளில் மாநில அரசும் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில செயலாளர் தண்டபாணி, துணை தலைவர் பிரேமா மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த போராட்டத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.