ரப்பர் தோட்ட தொழிலாளர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை


ரப்பர் தோட்ட தொழிலாளர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை
x

ஊதிய உயர்வு தொடர்பாக ரப்பர் தோட்ட தொழிலாளர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

ஊதிய உயர்வு தொடர்பாக ரப்பர் தோட்ட தொழிலாளர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ரப்பர் தோட்ட தொழிலாளர்கள்

குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இதில் அரசுக்கு 3,500 ஹெக்டர் பரப்பில் கீரிப்பாறை, மணலோடை, பரளியாறு, காளிகேசம், சிற்றார், மருதம்பாறை, குற்றியார், கோதையார் உள்பட 9 ரப்பர் கோட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த 9 கோட்டங்களில் சுமார் 2,500 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2016-ம் ஆண்டிற்கு பிறகு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. ஊதிய உயர்வு தொடர்பாக 70-க்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் எந்த முடிவும் ஏற்படவில்லை.

வேலை நிறுத்தம்

இதைத் தொடர்ந்து கடைசி பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி தொழிலாளர் நலத்துறை, வனத்துறை, தொழில்நுட்பவியல் துறை ஆகிய 3 துறைகளின் அமைச்சர்கள் முன்னிலையில் நடந்தது. அப்போது தொழிலாளர்களுக்கு 40 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அந்த வாக்குறுதியை அரசு ரப்பர் கழகம் நிறைவேற்றவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த தொழிலாளர்கள் கடந்த மாதம் 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் தின்கர்குமார், சேர்மன் கவுசல், பொது மேலாளர் குருசாமி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் பால்ராஜ் (ஐ.என்.டி.யு.சி.), வல்சகுமார் (சி.ஐ.டி.யு.), சுகுமாரன் (தொ.மு.ச.), மகேந்திரன் (அ.தி.மு.க.), இளங்கோவன் (ரப்பர் தோட்ட தொழிலாளர் பேரவை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொழிலாளர் நல அதிகாரி

பேச்சுவார்த்தையில் 40 ரூபாய் சம்பளம் உயர்வு வழங்க வேண்டும், மேலும் நிலுவைதொகையையும் வழங்க வேண்டும் மற்றும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதற்கு அதிகாரிகள் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை தொழிலாளர் நல அதிகாரி முன்னிலையில் தான் கையெழுத்து போட வேண்டும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

இதுபற்றி நிர்வாகிகள் கூறியதாவது:-

நாங்கள் கடந்த 7-11-2022 முதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். 30 நாட்கள் இரவு பகலாக போராட்டம் நடத்தினோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது நடத்திய பேச்சுவார்த்தையில் 40 ரூபாய் ஊதிய உயர்வு மற்றும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால் தொழிலாளர் நல அதிகாரி முன்னிலையில் ஒப்பந்தம் போட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்து இருக்கிறோம். தொழிலாளர் நல அதிகாரி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானதும் எங்களது போராட்டம் கைவிடப்படும். நாளை (அதாவது இன்று) முதல் நாங்கள் பணிக்கு திரும்புவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story