அரசு பள்ளி மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை அரசு செலுத்தியது


அரசு பள்ளி மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை அரசு செலுத்தியது
x
தினத்தந்தி 19 April 2023 2:00 AM IST (Updated: 19 April 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘நீட்’ உள்ளிட்ட 3 நுழைவுத்தேர்வுகளை எழுதும் அரசு பள்ளி மாணவர்கள் 201 பேருக்கு ரூ.1½ லட்சம் தேர்வு கட்டணத்தை அரசு செலுத்தியது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 'நீட்' உள்ளிட்ட 3 நுழைவுத்தேர்வுகளை எழுதும் அரசு பள்ளி மாணவர்கள் 201 பேருக்கு ரூ.1½ லட்சம் தேர்வு கட்டணத்தை அரசு செலுத்தியது.

நீட், ஜே.இ.இ., கியூட் தேர்வு

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஐ.ஐ.டி. உள்பட மத்திய தொழிற்கல்வி நிறுவனங்களில் என்ஜினீரியங் படிக்க ஜே.இ.இ. தேர்வு, மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க கியூட் தேர்வு ஆகிய நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த நுழைவு தேர்வுகளை எழுத இருக்கும் வசதி படைத்த மாணவர்கள், தனியார் மையங்களில் பயிற்சி பெறுகின்றனர்.

ஆனால் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் தனியார் மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற முடியாத நிலை உள்ளது. இதை தவிர்த்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் நீட், ஜே.இ.இ., கியூட் ஆகிய தேர்வுகளை எழுதுவதற்கு தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழிகாட்டப்படுகிறது. இதுதவிர நீட் தேர்வுக்கு அரசு பள்ளிகளில் மையங்கள் தொடங்கி பயிற்சி அளிக்கப்படுகிறது.

தேர்வு கட்டணம்

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 16 மையங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் நீட், ஜே.இ.இ., கியூட் ஆகிய தேர்வுகளுக்கு அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கவும் கல்வித்துறை சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையே நுழைவு தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்துவதற்கு ஏழை மாணவர்கள் சிரமப்படுவது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில் முதல்கட்டமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.32 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து 41 மாணவர்களுக்கு ஜே.இ.இ. தேர்வு கட்டணம் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் மேலும் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 300 ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொகையின் மூலம் 92 மாணவர்களுக்கு ஜே.இ.இ. தேர்வுக்கும், 57 மாணவர்களுக்கு கியூட் தேர்வுக்கும், 11 மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கும் அரசு சார்பில் கட்டணம் செலுத்தப்பட்டது.

201 மாணவர்கள்

இதன்மூலம் மொத்தம் 201 மாணவர்களுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 300 தேர்வு கட்டணம் செலுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் நீட், ஜே.இ.இ., கியூட் ஆகிய நுழைவு தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த இயலாத நிலையில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story