"அரசு திட்டங்கள் அனைவரையும்சென்றடைய துரித நடவடிக்கை" எடுக்கப்படும் என்றுதூத்துக்குடி மாவட்ட புதிய கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
“அரசு திட்டங்கள் அனைவரையும் சென்றடைய துரித நடவடிக்கை” எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட புதிய கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
"அரசு திட்டங்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடைய துரித நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தூத்துக்குடி மாவட்ட புதிய கலெக்டர் லட்சுமிபதி கூறினார்.
பொறுப்பேற்பு
தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த செந்தில்ராஜ் சென்னை சிப்காட் மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக, செங்கல்பட்டு உதவி கலெக்டராக பணியாற்றி வந்த கோ.லட்சுமிபதி நியமிக்கப்பட்டார்.
அவர் நேற்று காலை தூத்துக்குடி மாவட்டத்தின் 27-வது கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர், சிறப்பு திட்டங்கள் செயலாக்கதுறை இணை இயக்குனராவும், செங்கல்பட்டு உதவி கலெக்டராகவும் பணியாற்றி உள்ளார்.
புதிய கலெக்டர் கோ.லட்சுமிபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அடிப்படை வசதிகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளும் முழுமையாக வளர்ச்சி அடைவதற்கு தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து அனைத்து திட்டங்களும் முழுமையாக அனைத்து தரப்பினருக்கும் சென்றடையும் வகையில் செயல்படுத்துவது எனது செயல்பாடுகளில் முக்கியமாக இடம்பெறும். இதுதவிர அனைத்து பகுதிகளிலும் குடிநீர், சாலைவசதி, பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை போன்ற அனைத்து அடிப்படை வசதிகள், கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பெறக்கூடிய சான்றிதழ்கள், முதல்வரின் முகவரி, மக்கள் குறைதீர்க்கும் நாள், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள், மீனவர்கள் குறைதீர்க்கும் நாள், மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் ஆகியவற்றில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் விரைவாகவும், உரிய முறையிலும் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.
முழு முயற்சி
குறிப்பாக அரசின் பல்வேறு முதன்மை திட்டங்கள், முக்கிய திட்டங்கள், முத்திரை பதிக்கும் திட்டங்கள் ஆகியவற்றை அவ்வப்போது ஆய்வு செய்து துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அவை சிறப்பாக செயல்படுத்துவதையும் கண்காணிக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையான தொழில் துறை மேம்படுத்துவதற்கு உகந்த சூழ்நிலை உள்ள மாவட்டமாகும்.
இங்கு ரெயில் வசதி மட்டுமல்லாமல் துறைமுகம், விமான நிலையம் போன்ற வசதிகள் அனைத்தும் முறையாக செய்து கொடுக்கும் போது, தொழில் வளர்ச்சி சிறப்பாக அமையும். அதற்கான முழுமுயற்சிகளும் கண்டிப்பாக எடுக்க உள்ளேன்.
சட்டம்-ஒழுங்கு
களஆய்வு என்பது மிகமுக்கியம். அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் முழுமையாக தகுதியுடைய அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைகிறதா என்பதும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அதற்கான முயற்சிகளையும் நான் கண்டிப்பாக எடுப்பேன்.
சட்டம்-ஒழுங்கைப் பொறுத்தவரை போலீசாருடன் இணைந்து முறையாக கண்காணிக்கப்படும். போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களை களைய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற நீண்ட செயல்திட்டங்கள் இடையே உடனடியாக கவனிக்க வேண்டிய சில நிகழ்வுகளும் இருக்கிறது. முத்தாரம்மான் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக திருச்செந்தூரில் ஒரு ஆய்வு கூட்டம் நடத்த உள்ளேன்.
வெளிப்படை தன்மை
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் அது எந்த அளவுக்கு இருக்கிறது என்று ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். டெங்கு தடுப்பு நடவடிக்கைள் குறித்து நேற்று சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டறிந்து அதற்கான தடுப்பு பணிகளும் முழுமையாக முடுக்கி விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மாணவர்களுக்கு வங்கி கடன் மேளா இன்னும் இரண்டு வார காலத்துக்குள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இப்போது மேல்முறையீடு செய்து உள்ளார்கள். அந்த மேல்முறையீட்டில் ஒரு வாரத்துக்குள் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் அனைத்து திட்டங்களுடைய பயன்கள், அனைத்து தரப்பினருக்கும் சென்றடைவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். அதில் அனைத்தும் வெளிப்படைத் தன்மையாக பின்பற்றப்படும். இந்த அரசு திட்டங்கள் பற்றி முறையாக அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உங்கள் ஒத்துழைப்பு வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.