ஆபத்தான நிலையில் காணப்படும் அரசு பள்ளி கட்டிடம்
திருமருகல் அருகே ஆபத்தான நிலையில் காணப்படும் அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டப்படுமா? என பெற்றோர் எதிர்பார்த்து உள்ளனர்.
திட்டச்சேரி:
திருமருகல் அருகே ஆபத்தான நிலையில் காணப்படும் அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டப்படுமா? என பெற்றோர் எதிர்பார்த்து உள்ளனர்.
அரசு பள்ளி
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2005-06-ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் மூலம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு இயங்கி வந்தது.இந்த கட்டிடம் 5 ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பு பணி செய்யப்பட்டது.
ஆபத்தான நிலையில் கட்டிடம்
தற்போது எந்தவித பராமரிப்பும் இன்றி பள்ளி கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு எந்நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இந்த ஆபத்தை உணராமல் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கட்டிடத்துக்கு அருகில் சென்று விளையாடி வருகின்றனர். இதனால் பள்ளிக்கு மாணவர்களை அனுப்பவே பெற்றோர் அச்சப்படுகின்றனர்.
இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும்
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பள்ளி கட்டிடத்தை இடித்து தர வேண்டி ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே பெரும் விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து ஆபத்தான பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.