அரசு பள்ளி தையல் ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை
குடியாத்தத்தில் அரசு பள்ளி தையல் ஆசிரியை திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மகன் போலீசில் அளித்த புகாரில் தலைமைஆசிரியையின் டார்ச்சரே எனது தாயார் சாவுக்கு காரணம் என புகார் அளித்துள்ளார்.
குடியாத்தம்,
குடியாத்தத்தில் அரசு பள்ளி தையல் ஆசிரியை திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மகன் போலீசில் அளித்த புகாரில் தலைமைஆசிரியையின் டார்ச்சரே எனது தாயார் சாவுக்கு காரணம் என புகார் அளித்துள்ளார்.
தையல் ஆசிரியை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.எஸ்.ரோடு காமாட்சியம்மன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி (வயது 56). இவர் குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தையல் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவரது கணவர் தெய்வசிகாமணி அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் தெய்வசிகாமணி இறந்து விட்டார்.
இவளது மகன் விக்னேஷ் என்ஜினீயராவார். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இன்று மாலையில் வீட்டில் உள்ள அறையில் ஆசிரியை நாகேஸ்வரி தூக்குப்போட்டுக்கொண்டார்.
இதனை கண்ட மகன் விக்னேஷ் அக்கம் பக்கத்தினருடன் நாகேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது நாகேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பரபரப்பு புகார்
இதனைத் தொடர்ந்து ஆசிரியர் நாகேஸ்வரியின் தற்கொலை குறித்து அவரது மகன் விக்னேஷ் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் அவர் கூறியிரு்ததாவது:-
எனது தாயார் நாகேஸ்வரியை ஆசிரியையாக பணி செய்ய விடாமல் பள்ளியின் தலைமை ஆசிரியை பள்ளி நூலகத்தில் காலை முதல் மாலை வரை உட்கார வைத்து வேலை வாங்கினார். இதனால் எனது தாயார் மிகவும் மன வேதனையில் இருந்தார்.
மேலும் அனைவரின் முன் தலைமை ஆசிரியை ஒருமையில் பேசியும் பல்வேறு வேலைகள் கொடுத்து அலைக்கழித்து வந்துள்ளார். மன உளைச்சலால் உடல் பாதிக்கப்பட்ட எனது தாயார் நாகேஸ்வரி 12 நாள் மருத்துவ விடுப்பு எடுத்தார்.
நேற்று காலையில் மருத்துவ விடுப்பு முடிந்து உடல் தகுதி சான்று பெற்று பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியையிடம் சமர்ப்பித்தார். அப்போது எனது தாயாரை பல்வேறு வகையில் தலைமைஆசிரியை டார்ச்சர் செய்துள்ளார்.
மேலும் உடல் தகுதி சான்றிதழை நிராகரித்து அனுப்பிவிட்டதால் வீட்டுக்கு வந்து மன உளைச்சலில் இருந்தார். அதைத் தொடர்ந்து வீட்டில் தூக்கிட்டு நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு புகாரில் கூறி இருந்ததாக கூறப்படுகிறது.
வழக்குப்பதிவு
இது குறித்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.