அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை
கரூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி ஆசிரியை
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள கருப்பண்ண கவுண்டர் தெருவை ேசர்ந்தவர் மலையப்பசாமி (வயது 45). இவர் புகழூர் காகித ஆலையில் சிவில் காண்டிராக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீதா (39). இவர் திண்டுக்கல் பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்த தம்பதிக்கு நிபுன் (14), தருன் (7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கீதாவின் கணவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கீதா மன வருத்தத்தில் இருந்து உள்ளார்.
தூக்கில் தொங்கினார்
இந்தநிலையில் வெளியில் சென்று இருந்த மலையப்ப சாமி வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வீட்டின் கதவை நீண்டநேரமாக தட்டியும் திறக்கப்படாததால் மலையப்பசாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கீதா தூக்கில் தொங்கிகொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு கீதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தற்கொலை குறித்து கீதாவின் சகோதரி ரேணுகா கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.