அடிப்படை வசதிகள் இன்றி செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளி
சீர்காழியில் அடிப்படை வசதிகள் இன்றி அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
சீர்காழியில் அடிப்படை வசதிகள் இன்றி அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு மேல்நிலைப்பள்ளி
சீர்காழி வடக்கு மடவிளாகத்தில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த அரசு பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவ-மாணவிகள் மாடிப்படியிலும், மரத்தடியிலும், பள்ளி வளாகத்திலும், கல்வி பயில வேண்டிய அவலநிலை பல காலமாக இருந்து வருகிறது.
அடிப்படை வசதிகள்
மேலும் இந்த பள்ளியில் விளையாட்டு மைதானம், ஆய்வுக்கூடங்கள், நூலகம், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, சைக்கிள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் பயிலும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளிக்கு சென்று ஆய்வக தேர்வு, அரசு பொது தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் எழுத வேறு பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
பெற்றோர் கோரிக்கை
விளையாட்டு மைதானம் இல்லாததால் விளையாட்டுத்துறையில் மாணவர்கள் ஈடுபட முடியாத நிலையில் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீர்காழி நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ-மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.