அரசு பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை வசதி; கலெக்டரிடம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மனு


அரசு பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை வசதி; கலெக்டரிடம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மனு
x

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை, போதிய கட்டிட வசதி செய்துதர வேண்டும் என்று கலெக்டரிடம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு கொடுத்தார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை, போதிய கட்டிட வசதி செய்துதர வேண்டும் என்று கலெக்டரிடம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு கொடுத்தார்.

கலெக்டரிடம் மனு

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் நேற்று மாவட்ட கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாங்குநேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, முனைஞ்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு போதிய கட்டிட வசதி இல்லாததால், உடனடியாக கட்டிட வசதி செய்துதர வேண்டும். மேலும் அந்த பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் மேஜை, நாற்காலி வசதிகளும் செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்கள் பள்ளிக்கூட நேரத்தில் போதிய பஸ் வசதி இல்லாமல் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அவர்கள் பயன்பெறும் வகையில், காலையிலும், மாலையிலும் மூலைக்கரைப்பட்டிக்கு கூடுதல் பஸ் வசதி செய்துதர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அப்போது மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவி பார்வதி உடன் இருந்தார்.

புதிய மின்மாற்றி

நாங்குநேரி தொகுதி சீவலப்பேரியில் சீராக மின்வினியோகம் செய்யும் வகையில், மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி உத்தரவின்படி ரூ.4 லட்சத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதனை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

நெல்லை கிராமப்புற மின்வினியோக செயற்பொறியாளர் ஜான் பிரிட்டோ மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story