தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
திருவாரூர்:
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
ஆய்வு கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பள்ளி கல்வித்துறையின் சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை உள்பட 4 மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடனான மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது, கற்றல் முறைகள், அரசின் புதிய கல்வி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளிடம் இருந்து கருத்து கேட்டறியப்பட்டது.
இளைஞர்களுக்கு வேலை
ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயதினை உயர்த்தி இருந்தாலும், படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வழங்குவதற்கான நடவடிக்கையை கல்வித்துறை எடுக்கும். தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தருகின்ற அரசாக தி.மு.க. இருந்து வருகிறது. மொழி விஷயத்தில் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்ற நிலை வந்து விடகூடாது என்பதை கருத்தில் கொண்டு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்
இந்தியா ஜனநாயக நாடு என்பதால் அரசு பள்ளிகளில் தான் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று யாரையும் நிர்பந்தம் செய்ய முடியாது. அதே நேரத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரம் நிச்சயம் உயர்த்தப்படும். அந்தவகையில் இந்த ஆண்டு இதுவரை 7 லட்சத்து 34 ஆயிரம் குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாணவர்கள் அவசியம் முககவசம் அணிய வேண்டும்.இல்லம் தேடி கல்வி திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வடமாநிலங்களில் இந்த திட்டத்தை கொண்டு வரும் அளவுக்கு தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள்
கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா, கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மாநில திட்ட இயக்குனர் சுதன், திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், தாட்கோ தலைவர் மதிவாணன், முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் பூண்டி.கே.கலைவாணன், மாரிமுத்து, துரை.சந்திரசேகரன், பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.