ஊட்டியில் அரசுத்துறை ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
காலி பணியிடங்களை நிரப்ப கோரி ஊட்டியில் அரசுத்துறை ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊட்டி
15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வழங்க வேண்டும், அனைத்து துறையிலும் உள்ள ஓட்டுநர் காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில், ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஓட்டுநர்களுக்கு தர ஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய திருத்தத்தை அமல்படுத்த வேண்டும். கல்வி அடிப்படையில் ஓட்டுநர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தினர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சேகர், மாவட்ட பொருளாளர் மயில்சாமி, செயலாளர் சர்தார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.