மகன் குடிப்பழக்கத்தால் அரசு அலுவலர் தற்கொலை
மகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் ஓய்வுபெற்ற அறநிலையத்துறை அலுவலர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடையநல்லூர்:
மகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் ஓய்வுபெற்ற அறநிலையத்துறை அலுவலர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்கோட்டை அருகே நடந்த இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அறநிலையத்துறை அலுவலர்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 70). இவர் இந்து அறநிலையத்துறையில் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கருப்பையாவின் மகன் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். கையில் பணம் இல்லாமல் இருந்தால் கடன் வாங்கி குடித்தாராம். இதனால் கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வந்து கேட்கத்தொடங்கினர்.
தற்கொலை
இதனால் கருப்பையா தனது மகனை கண்டித்தார். குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கூறினார். ஆனால் மகன் தந்தை சொல்லை கேட்கவில்லை. குடிப்பழக்கத்தையும் கைவிடவில்லை. மது எனக்கு முக்கியம் எனக்கூறி தொடர்ந்து குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கருப்பையா மனவேதனையில் இருந்தார். நேற்று முன்தினம் கருப்பையா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்ததும் அச்சன்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கருப்பையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்த கருப்பையாவிற்கு மகன் மற்றும் மகள்கள் 6 பேர் உள்ளனர்.
குடிப்பழக்கத்திற்கு மகன் அடிமையாகி கைவிட மறுத்ததால் மனமுடைந்த தந்தை தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.