திருமண உதவி திட்டங்களை அரசு தொடர வேண்டும்-மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம்
திருமண உதவி திட்டங்களை அரசு தொடர வேண்டும் என மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 3-வது ஒன்றிய மாநாடு அரியலூர் மாவட்டம் தா.பழூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றிய தலைவர் வாசுகி தலைமை தாங்கினார். செபஸ்தியம்மாள், அழகு ரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில தலைவர் வாலண்டினா, மாநில துணை செயலாளர் கீதா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாநாட்டில் தமிழக அரசு செயல்படுத்தி வந்து தற்போது நிறுத்தப்பட்டுள்ள மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டம் உள்பட அனைத்து நிதியுதவி திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். தா.பழூரில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். விரிவுபடுத்தப்பட்ட பஸ் நிலையம் அமைக்க வேண்டும். பெண்களுக்கான தனி கழிவறை வசதி அமைக்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு இல்லாமல் அனைத்து பொருட்களும் கிடைக்க வேண்டும் என்பன உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் மாவட்ட செயலாளர் பத்மாவதி, மாவட்ட துணை செயலாளர் மீனா, மாவட்ட பொருளாளர் அம்பிகா, ஒன்றிய செயலாளர் மாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.