அரசு காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்; சசிகலா வலியுறுத்தல்
தமிழக அரசு காலி அரசு பணியிடங்களை நிரப்புவதில் எந்தவித காலதாதமும் இன்றி உடனடியாக நிரப்பிட வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னை,
சசிகலா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2023-ம் ஆண்டுக்கான அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணையை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் மிக குறைந்த எண்ணிக்கையில் அதாவது 1,754 பணியிடங்கள் மட்டும் நிரப்பப்பட உள்ளதாக தெரிய வருகிறது.
இது அரசு வேலையை நம்பி காத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளம் சமுதாயத்தினரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது. இதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.தி.மு.க.வினர் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டு அரசு வேலையில் பணியாளர்களை நிரப்பாமல் இருந்தால் எவ்வாறு முதல் தலைமுறை பட்டதாரிகளை முன்னுக்கு கொண்டு வர முடியும் என்று தெரியவில்லை?எனவே தமிழக அரசு காலி அரசு பணியிடங்களை நிரப்புவதில் எந்தவித காலதாதமும் இன்றி உடனடியாக நிரப்பிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.