மருத்துவ சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும்
மருத்துவ சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் என தேசிய பளுத்தூக்கும் வீராங்கனை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்கள் குறைதீர்வு கூட்டம்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் (நில எடுப்பு) முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர்.
பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே அவர் சென்று மனுக்களை வாங்கினார்.
சிகிச்சைக்கு உதவ வேண்டும்
கூட்டத்தில் வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த தேசிய பளுதூக்கும் வீராங்கனை மோகனபிரியா (வயது 20) அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் சார்பில் தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டிகள், வலுதூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வாங்கி உள்ளேன். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பயிற்சியின்போது எனது தோள் பட்டையில் சதைப்பிளவு ஏற்பட்டது.
இதுதொடர்பாக சென்னை நேரு விளையாட்டு அரங்கில் உள்ள மருத்துவரிடம் தெரிவித்தேன். இதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள தாமதப்படுத்தி வருகின்றனர். எனது பிரச்சினையை சரிசெய்ய தனியார் மருத்துவமனைக்கு செல்ல எனக்கு போதிய வசதிகள் இல்லை. எனவே எனது சிகிச்சைக்கு அரசு உதவிட வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் பொது திட்டத்தின்கீழ் ரூ.6 ஆயிரத்து 880 மதிப்புடைய தையல் எந்திரங்கள் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் வழங்கினார்.