அடுத்த 2 ஆண்டுகளில் 4 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
அடுத்த 2 ஆண்டுகளில் 4 லட்சம் பேருக்கு அரசு வேலைகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த 2½ ஆண்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாக 22,781 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் தமிழக அரசு பொறுப்பேற்ற போது இருந்ததை விட இப்போது அரசு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இது சாதனை அல்ல.
தமிழ்நாட்டில் அனைத்து அரசுத் துறைகளிலும் சேர்த்து 4 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ளன.
மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலியிடங்களால் அவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளுக்கு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
4 லட்சம் பேருக்கு வேலை
நடப்பாண்டில், 6,553 இடைநிலை ஆசிரியர்கள், 3,587 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 10,140 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தும் இதுவரை ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிக்கை கூட இன்னும் வெளியிடப்படாததால் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகக் கூட அவர்கள் நியமிக்கப்பட வாய்ப்பில்லை.
தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையிலும், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 5½ லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும், நடப்பு நிதியாண்டில் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். அடுத்த 2 ஆண்டுகளில் ஆண்டுக்கு தலா 2 லட்சம் வீதம் 4 லட்சம் பேருக்கு அரசு வேலைகளை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.