விசைப்படகுகளை மராமத்து செய்ய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும்
விசைப்படகுகளை மராமத்து செய்ய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும்
மீன்பிடி தடைகாலத்தில் விசைப்படகுகளை மராமத்து செய்ய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வர்ணம் பூச ரூ.4 லட்சம்
தமிழ் மாநில விசைப்படகு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் தாஜுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மீன்பிடி தடைகாலத்தில் 61 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் ஒரே இடத்தில் தங்களது விசைப்படகுகளை நிறுத்தி வைப்பதால் முழுமையாக மராமத்து பணிகள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சாதாரணமாக ஒரு விசைப்படகை கரையில் ஏற்றி சுத்தம் செய்து சிறிய அளவில் மராமத்து பணிகள் செய்து வர்ணம் பூச ரூ.4 லட்சம் வரை செலவாகிறது.
நிதி உதவி அளிக்க வேண்டும்
தற்போது தடைகாலம் என்பதால் முழுமையாக விசைப்படகுகளை மராமத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு விசைப்படகை முழுமையாக மராமத்து செய்ய ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை தேவைப்படுகிறது. எனவே நலிந்து வரும் மீன்பிடி தொழிலை பாதுகாக்க மீன்பிடி தடைகாலங்களில் விசைப்படகுகளை மராமத்து பணி செய்ய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும். அப்போது தான் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும்.