அரசு ஊழியர்கள் உள்பட 5 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு


அரசு ஊழியர்கள் உள்பட 5 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு
x

இலங்கையை சேர்ந்தவருக்கு இந்திய குடியுரிமை உள்ளதாக போலி ஆவணங்கள் தயாரித்து பாஸ்போர்ட் எடுத்த வழக்கில் அரசு ஊழியர்கள் உள்பட 5 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருவாரூர்


இலங்கையை சேர்ந்தவருக்கு இந்திய குடியுரிமை உள்ளதாக போலி ஆவணங்கள் தயாரித்து பாஸ்போர்ட் எடுத்த வழக்கில் அரசு ஊழியர்கள் உள்பட 5 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

போலி ஆவணங்கள்

இலங்கையை சேர்ந்த கஜன் என்பவரின் பாஸ்போர்ட்டை ராமேஸ்வரத்தை அடுத்த மண்டபம் அகதிகள் முகாமில் கியூ பிரிவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கூப்பாச்சி கோட்டை முகவரியில் கஜன் வசிப்பதாக கடந்த 2012-ம் ஆண்டு பாஸ்போர்ட் எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், போலி ஆவணம் தயாரித்து கஜன் என்பவருக்கு பாஸ்போர்ட் எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

9 பேர் மீது வழக்கு

மன்னார்குடியில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்த இந்திரஜித், சென்னையை சேர்ந்த திரைப்பட இயக்குனர் அசோகன், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கணினி-இளநிலை உதவியாளராக பணியாற்றிய ரவிச்சந்திரன், அசோக்குமார் மற்றும் கூப்பாச்சிகோட்டையை சேர்ந்தவர்கள் தபால்காரர் மகாராஜன், பிரபாகரன், ஈசன், பத்மநாபன், சென்னை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் ஆகிய 9 பேர் இலங்கையை சேர்ந்தவருக்கு இந்திய குடியுரிமை உள்ளதாக போலி ஆவணங்கள் தயாரித்து பாஸ்போர்ட் எடுத்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.இது குறித்து கியூ பிரிவு போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவாரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்தது.

தண்டனை

இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய இந்திரஜித், ஈசன், பத்மநாபன் ஆகிய 3 பேரும் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விட்டனர். இந்த நிலையில் கடந்த மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.அந்த தீர்ப்பில் ரவிச்சந்திரன், அசோக்குமார், மகாராஜன் மற்றும் லோகநாதன் ஆகிய 4 பேருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், திரைப்பட இயக்குனர் அசோகன், பிரபாகரன ஆகிய இருவருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

சிறையில் அடைப்பு

இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்வதற்காக ஒரு மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர்களது மேல்முறையீட்டு மனுவை சென்னை ஐகோர்ட்டு ஏற்கவில்லை. இதையடுத்து நேற்று அரசு ஊழியர்கள் ரவிச்சந்திரன், அசோக்குமார், மகாராஜன் மற்றும் பிரபாகரன், அசோகன் ஆகிய 5 பேரும் திருவாரூர் கோர்ட்டில் ஆஜராகினர்.இதனையடுத்து கோர்ட்டு உத்தரவின்படி 5 பேரையும் திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் நேற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story