அகவிலைப்படி கேட்டு சென்னையில் அடுத்த மாதம் தொடர் போராட்டம் அரசு போக்குவரத்து கழக அனைத்து ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு தீர்மானம்
அகவிலைப்படி கேட்டு சென்னையில் அடுத்த மாதம் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அரசு போக்குவரத்து கழக அனைத்து ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து ஓய்வூதியர்களின் கூட்டமைப்பு அகவிலைப்படி உயர்வு மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தசரத ராமன், ராஜேந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நவம்பர் 2015 முதல் நிறுத்தம் செய்யப்பட்ட அகவிலைப்படி உயர்வு ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் வழங்கப்படும் என தி.மு.க. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வு கால பண பலன்களை வழங்க வேண்டும்.
அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில் மார்ச் மாதம் 3-வது வாரத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.