அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் போராட்டம்
நெல்லை வண்ணார்பேட்டையில் அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் போராட்டம் நடத்தினார்கள்
வண்ணார்பேட்டை:
நெல்லை வண்ணார்பேட்டையில் அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் போராட்டம் நடந்தது.
போராட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சி.ஐ.டி.யு. சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது.
சங்க தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் ஜோதி முன்னிலை வகித்தார். நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. செயலாளர் முருகன் போராட்டத்தை தொடங்கி பேசினார்.
கோரிக்கைகள்
போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்கும் உள்ள வித்தியாச தொகையை அரசு வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணி ஓய்வு, விருப்ப ஓய்வு, மரணமடைந்த தொழிலாளர்களுக்கு ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதில் டி.என்.எஸ்.டி.சி. பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன், எஸ்.இ.டி.சி. பொதுச்செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினார்கள். முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் நன்றி கூறினார்.