41 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. வழங்கினர்
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 41 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. வழங்கினர்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 41 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.82 ஆயிரம் மதிப்பில் தையல் எந்திரம், 4 பேருக்கு சலவை பெட்டிகள் மற்றும் தலா ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி, ஊன்று கோல், மடக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. பட்டுவளர்ச்சி துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.70 ஆயிரம் மதிப்பில் வெண்பட்டு புழுவளர்ப்பு பயிற்சிக்கான பயிற்சி உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பரமணியன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வார் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகேசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.