தமிழையோ, தமிழ்நாட்டை பற்றியோ கவர்னருக்கு தெரியாது - பிரேமலதா விஜயகாந்த் தாக்கு


தமிழையோ, தமிழ்நாட்டை பற்றியோ கவர்னருக்கு தெரியாது - பிரேமலதா விஜயகாந்த் தாக்கு
x

கவர்னர் 5 ஆண்டுகள் பதவியில் இருந்துவிட்டு போய் விடுவார், அவருக்கு தமிழையோ, தமிழ்நாட்டை பற்றியோ தெரியாது என மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்

மதுரை


கவர்னர் 5 ஆண்டுகள் பதவியில் இருந்துவிட்டு போய் விடுவார், அவருக்கு தமிழையோ, தமிழ்நாட்டை பற்றியோ தெரியாது என மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

பிரேமலதா விஜயகாந்த்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக கவர்னரின் கருத்தை, கருத்தாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தமிழுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. அவருக்கு தமிழகத்தை பற்றி என்ன தெரியும். தமிழகம் என்பதும், தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான். தமிழ் பற்றி தெரியாத கவர்னர் கூறும் கருத்தை, தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். கவர்னர் கூறும் கருத்தை தமிழக மக்கள் சார்பாக தே.மு.தி.க. எதிர்க்கிறது. கவர்னர் என்பவர், 5 வருடங்கள் பதவியில் இருந்து போய் விடுவார். அவருக்கு தமிழையோ, தமிழ்நாட்டை பற்றியோ தெரியாது.

கூட்டணி யாருடன்..

தமிழக அரசு, மக்கள் ஐ.டி.யை கொண்டு வருவதாக கூறுகிறது. அதற்கு ஏற்கனவே தே.மு.தி.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஆதார் அட்டை மூலம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைத்து வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு அதிகமானோர் வந்து வேலை செய்து கொண்டிருக்கின்றனர். மாநிலத்திற்கு ஒரு ஐ.டி. என புதிதாக ஒன்று கொண்டு வருவதால், அது நாட்டில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். அந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நிறைய காலங்கள் இருக்கிறது. இப்போது கூட்டணியை பற்றி பேச வேண்டியதில்லை. உட்கட்சி பணிகள்தான் நடந்து கொண்டிருக்கிறது. கட்சியின் வளர்ச்சியில் முழு கவனம் செலுத்தப்படுகிறது. கூட்டணி குறித்து தக்க சமயத்தில் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.

செவிலியர்களுக்கு ஆதரவு

கொரோனா நோய் உலகை ஆட்டிப்படைத்த போது தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றிய செவிலியர்களை பணி நீக்கம் செய்தது தவறு. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே செவிலியர்களுக்கு நாங்கள் ஆதரவு அளித்திருக்கிறோம். செவிலியர்களை, கருவேப்பிலை மாதிரி தேவையை உபயோகித்து தூக்கி எறிவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் காரில் புறப்பட்டு ராஜபாளையம் சென்றார். முன்னதாக துணை செயலாளர் பார்த்தசாரதி, அவைத்தலைவர் இளங்கோவன், உயர்மட்ட குழு உறுப்பினர் பாலன், மாவட்ட செயலாளர்கள் கணபதி, முத்துப்பட்டி மணிகண்டன், பாலச்சந்தர், விசாரணை குழு உறுப்பினர் அழகர்சாமி தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.


Next Story