மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல்


மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல்
x

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அங்கு பாரம்பரிய நடனமாடி பழங்குடியின மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திண்டுக்கல்

கொடைக்கானலில் கவர்னர்

'மலைகளின் இளவரசி' யான கொடைக்கானலுக்கு, 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று முன்தினம் வருகை புரிந்தார். கவர்னருடன் அவரது மனைவி லட்சுமி ரவியும் வந்துள்ளார்.

நேற்று காலை கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள நாட்டின் மிகப்பெரிய ரோஜாபூங்காவுக்கு கவர்னர் தனது மனைவியுடன் சென்றார். அங்கு தோட்டக்கலைத்துறை சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பூங்கா ஊழியர்கள் கவர்னருக்கு வணக்கம் தெரிவித்தனர். அதற்கு கவர்னரும், அவரது மனைவியும் கைகூப்பி ஊழியர்களுக்கு வணக்கம் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பேட்டரி காரில் பயணம்

இதைத்தொடர்ந்து பேட்டரி காரில் ½ மணி நேரம் பயணித்து, பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் லட்சக்கணக்கான பூக்களை கவர்னர் பார்த்து ரசித்தார். மேலும் பூங்காவில் பணிபுரியும் ஊழியர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

பூங்கா பராமரிப்பு குறித்த விவரங்களை அவர் கேட்டறிந்தார். பூங்காவை சிறப்பாக பராமரித்து வருவதாக ஊழியர்களுக்கு கவர்னர் பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர்களுடன் சேர்ந்து குழு புகைப் படம் எடுத்து கொண்டார்.

இதேபோல் அதேபகுதியில் உள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தையும் அவர் பார்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் ஆய்வு குறித்து விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தார்.

பாரம்பரிய நடனம்

அதன்பின்னர் காலை 11 மணி அளவில், கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகத்துக்கு கவர்னர் ஆர். என்.ரவி சென்றார். அவருக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கலா சேதுபதி, பதிவாளர் ஷீலா மற்றும் பேராசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மேலும் அங்கு பழங்குடியின மக்கள் பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க நடனமாடி கவர்னருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை ஆர்வமுடன் கவர்னர் கண்டுகளித்தார்.

பழங்குடியின மக்களின் குடிசை

பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பழங்குடியின மக்களின் மாதிரி குடிசைக்குள் சென்றார். குடிசையின் உட்புறத்தையும், அதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்களையும் அவர் பார்வையிட்டு, அவர்களின் வாழ்வியல் முறை குறித்து பழங்குடியின மக்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது பழங்குடியின மக்கள் கொடைக்கானல் பகுதியில் ஏகலைவன் உண்டு உறைவிட பள்ளி அமைக்க வேண்டும், வன உரிமை சட்டப்படி பழங்குடியின மக்கள் வைத்திருக்கும் அனைத்து நிலங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும், புலையன் சாதியினரை மீண்டும் எஸ்.டி.பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கைகளை கவனமுடன் கவர்னர் கேட்டார்.

மாணவிகளுடன் கலந்துரையாடல்

இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அன்னை தெரசாவின் உருவச்சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அவர், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் சிறப்புகள் குறித்து துணைவேந்தர் கலாவிடம் கேட்டறிந்தார்.

மேலும் அங்கு புதிதாக கட்டப்பட்ட சர்.சி.வி. ராமன் இயற்பியல் ஆய்வகத்தை திறந்து வைத்தார். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காந்தி மியூசியத்தையும் கவர்னர் பார்வையிட்டார்.

அதன்பிறகு பல்கலைக்கழக மாணவிகளுடன் கவர்னர் கலந்துரையாடினார். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாலையில், கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களை கவர்னர் கண்டுகளித்தார்.


Next Story