விவசாயத்தில் இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்உதாரணமாக திகழும்
இன்னும் 25 ஆண்டுகளில் விவசாயத்தில் இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்உதாரணமாக திகழும் என கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
இன்னும் 25 ஆண்டுகளில் விவசாயத்தில் இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்உதாரணமாக திகழும் என கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
இயற்கை வேளாண் பண்ணை
ராமநாதபுரம் அருகே எட்டிவயல் பகுதியில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி முருகேசனின் இயற்கை வேளாண் பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணைக்கு நேற்று காலை கவர்னர் ஆர்.என்.ரவி சென்றார். அவரை தரணி முருகேசன் வரவேற்றார். கவர்னருக்கு இயற்கை பானங்களான இளநீர், நுங்கு, பதநீர் போன்றவை வழங்கப்பட்டன. பின்னர் பண்ணையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், கீரைகள், பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் பண்ணையில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகள், மற்றும் நாட்டு கோழிப்பண்ணையை பார்வையிட்டார். மேலும் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
தொடர்ந்து கவர்னர், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- விவசாயிகளாகிய உங்களை பார்க்கும் போது நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதை எண்ணி பெருமை கொள்கிறேன். இந்தியா உணவு உற்பத்தியில் சிறந்து விளங்கி வருகிறது. ஆயிரம் ஆண்டுகளாக இந்திய விவசாயிகள் விவசாயத்தை பாரம்பரியமாக காத்து இன்றைக்கு உலகத்திற்கே உணவு வழங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளனர்.
முன்உதாரணமாக திகழும்
பிரதமர் மோடி விவசாய குடும்பத்தை சார்ந்தவர் என்பதால் விவசாயத்திற்காகவும், விவசாயிகள் நலனுக்காகவும் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். பல வளர்ந்த நாடுகளால் கூட மற்ற நாடுகளுக்கு எந்த பயனும் இல்லை. ஆனால் வளர்ந்து வரும் இந்தியா, உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பயன் உள்ளதாக இருந்து வருகிறது. குறிப்பாக உலக நாடுகள் பலவும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து தாங்களே பயன் அடைந்தனர்.
இந்தியா கண்டு பிடித்த கொரோனா தடுப்பூசி உலக நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற வழியில் அனைத்து நாடுகளையும் ஒரே குடும்பமாக பிரதமர் மோடி பார்த்து வருகிறார்.
இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா விவசாயத்தில் பல படிகள் முன்னேறி மற்ற நாடுகளுக்கு முன்உதாரணமாக திகழும். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியின் முடிவில், விவசாயிகள் தங்களின் கோரிக்கை மனுக்களை கவர்னரிடம் அளித்தனர்.