கவர்னரை ஜனாதிபதி திரும்பப் பெற வேண்டும் -கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்


கவர்னரை ஜனாதிபதி திரும்பப் பெற வேண்டும் -கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
x

பொது பாடத்திட்டத்தை எதிர்ப்பது வரம்புமீறிய செயல்: கவர்னரை ஜனாதிபதி திரும்பப் பெற வேண்டும் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக ஓய்வுபெற்ற முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியிருப்பது அவரது ஆணவப் போக்கை வெளிப்படுத்துகிறது. எந்த பிரச்சினையிலும் அரசமைப்புச் சட்ட அதிகார வரம்புகளை மீறி தொடர்ந்து கவர்னர் செயல்பட்டு வருகிறார்.

இதுவரை தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய 18-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை அப்படியே கவர்னர் கிடப்பில் போட்டு அலட்சியப் போக்குடன் செயல்பட்டுவருவது அவரது தமிழக விரோதப் போக்கை வெளிப்படுத்துகிறது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாநில அரசின் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியது. தமிழ்நாடு அரசின் பொது பாடத்திட்டத்தை எதிர்ப்பது கவர்னரின் வரம்புமீறிய செயலாகும்.

கவர்னராக நியமனம் செய்தது முதற்கொண்டு தமிழக அரசுக்கு எதிராகவும், அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாகவும் செயல்பட்டுவரும் தமிழக கவர்னரை உடனடியாக ஜனாதிபதி திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story