தமிழக அரசியல் களத்தை குழப்ப கவர்னர் முயற்சி: அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
‘தமிழக அரசியல் களத்தை குழப்ப கவர்னர் முயற்சித்து வருகிறார்' என அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒழுங்காக ஒப்புதல் அளிப்பது நீங்கலாக அனைத்துச் செயல்களையும் ஒழுங்காக செய்துகொண்டிருக்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி. திருக்குறள் மொழிபெயர்ப்பு சரியாக இருக்கிறதா, வள்ளலார் பாட்டு முறையாக இருக்கிறதா என பார்க்கிறார், சனாதனம் குறித்த தனது ஆய்வை தினமும் செய்து வருகிறார்.
'திராவிடம்' என்ற சொல்லைக் கேட்டாலே அவருக்கு எரிகிறது. திராவிடத்துக்கு எதிரான தனது வன்மம் நிறைந்த வார்த்தைப் போரை தொடர்ந்து நடத்திவருகிறார். பா.ஜ.க.வின் முந்தைய தலைவர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்தியாயாவின் நூலை வெளியிட்ட கவர்னர் ஆர்.என்.ரவி, 'திராவிடம் பற்றிய பேச்சு பிரிவினையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது' என்று பேசியிருக்கிறார்.
கவர்னரின் காழ்ப்புணர்ச்சி
திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் சுயமரியாதை, சமூகநீதி, சமதர்மம், மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி, இந்தியக் கூட்டாட்சி ஆகும். இதை உள்ளடக்கியதுதான் திராவிட மாடல் ஆட்சியில் கோட்பாடு. தனது ஆட்சியின் நெறிமுறையாக இதனை வடித்துக் கொடுத்து செயல்படுத்திவருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். எல்லோருக்கும் எல்லாம் என்பதைத்தான் தனது இலக்காக அவர் குறிப்பிட்டு வருகிறார். இதில் பிரிவினை எங்கே இருக்கிறது?
திராவிட இயக்கமானது கடந்த நூறு ஆண்டு காலமாக, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும் மீட்சிக்கும் உணர்ச்சிக்கும் உயர்வுக்கும் அடித்தளம் அமைத்துவிட்டதே என்ற கோபத்தில் திராவிடம் என்ற சொல்லின் மீது தனது காழ்ப்புணர்ச்சியைக் காட்டிவருகிறார் கவர்னர் ஆர்.என்.ரவி.
அரசியல் களத்தை குழப்ப முயற்சி
அவருக்கு தமிழ்நாடு என்ற சொல் பிடிக்கவில்லை. அதற்காக, தமிழ்நாடு என்ற மாநிலத்தின் பெயரை மாற்றிக்கொள்ள முடியாது. அவருக்கு திராவிட இயக்கம் பிடிக்கவில்லை. அதற்காக திராவிடம் என்ற சொல்லை நாங்களும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. கவர்னராக வந்தவர், இந்த மாநிலத்துக்கு ஆக்கபூர்வமாக எதுவுமே செய்யவில்லை. தினமும் ஏதாவது புலம்பிக்கொண்டு இங்குள்ள அரசியல் களத்தை குழப்ப முயற்சித்து வருகிறார்.
ஆளும் தி.மு.க. அரசுக்கு குடைச்சல் ஏற்படுத்தி வருகிறார். சனாதன, வர்ணாசிரம சக்திகளுக்கான திண்ணை பிரசாரக் களமாக கவர்னர் மாளிகையை மாற்றிக்கொண்டு வருகிறார். கவர்னர் பதவி என்பது மாநில அரசு நிர்வாகத்தின் ஓர் அங்கம் என்பதை மறந்து அரசுக்கு எதிரானவர்களோடு சேர்ந்து சதியாலோசனை மண்டபமாக கிண்டி மாளிகையைப் பயன்படுத்தி வருகிறார்.
கவர்னரே எங்களுக்கு பிரசார கருவி
கடந்த அரை நூற்றாண்டாக அரசியல் களத்தில் இருந்து துடைத்தெறியப்பட்ட ஆரிய அரசியல் சக்திகள், தங்களது சாயம்போன சனாதனப் புத்தகங்களுக்கு ஆர்.என்.ரவியை வைத்து புதிய பொழிப்புரை எழுதவைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த அவதாரம் போட்டு வந்தாலும் ஆரிய மாயையை அடையாளம் காணும் அண்ணாவின் தம்பிகள் நாங்கள். கருணாநிதியின் உடன்பிறப்புகள் நாங்கள். ஆர்.என்.ரவியின் அன்றாடப் புலம்பல்கள் பற்றி எல்லாம் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. அவரை நாங்கள் பொருட்படுத்தவே இல்லை என்பதுதான் உண்மை.
கவர்னர் எங்களுக்கு பிரசாரக் கருவிதான். இங்கே இருந்து அவரை மாற்றிவிடக் கூடாது. அவர் இருந்தால்தான் நம்முடைய கொள்கைகளை நாம் வளர்க்க முடியும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். திராவிட இயக்கத்தின் கொள்கைகள் தமிழ்நாட்டு மக்கள் மனதில் பட்டை தீட்டப்பட்ட வைரமாக மின்னுவதற்கு நாள்தோறும் தொண்டாற்றிவரும் கவர்னருக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.