'கவர்னர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு, காதுகள் இல்லை' முதல்-அமைச்சர் விமர்சனம்


கவர்னர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு, காதுகள் இல்லை முதல்-அமைச்சர் விமர்சனம்
x

இதுவரையிலான செயல்பாடுகளை பார்த்தால், கவர்னர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு, காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உங்களில் ஒருவன் பதில்கள்' என்ற தலைப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

நான் முதல்வன் திட்டம்

கேள்வி: உங்களுடைய எழுபதாவது பிறந்தநாளில், தொண்டர்கள் கொடுத்த பரிசுகளில் உங்கள் மனம் கவர்ந்த பரிசு எது?

பதில்: உங்களில் ஒருவனான என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அழகு பார்த்ததைவிட பெரிய பரிசு இருக்க முடியுமா?.

கேள்வி: உங்கள் கூட்டணி கட்சித் தலைவர்கள் பற்றி ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் என்ன சொல்வீர்கள்?

பதில்: 'தோள் கொடுப்பான் தோழன்' என்பதன் அடையாளம் அவர்கள்.

கேள்வி: கிராமப்புற பெற்றோர், மாணவ, மாணவியரிடம் ''நான் முதல்வன்'' திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதா?

பதில்:- நன்றாக ஏற்பட்டிருக்கிறது! கடந்த ஆண்டு மார்ச் 1-ந்தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இந்த ஆண்டு மார்ச் 1-ந்தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 1,300 கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்திருக்கிறார்கள். இந்த திட்டமே அனைத்து மாணவர்களுக்குமானதுதான்.

நகர்ப்புற மாணவர்களாவது பயிற்சி மையங்களுக்கு போகின்ற வாய்ப்பு அதிகம். கிராமப்புற மாணவர்களுக்குத்தான் 'நான் முதல்வன்' திட்டமானது அதிகமாக தேவை. தமிழக இளைஞர்கள் அனைவரும் நான் முதல்வன் எனச் சொல்ல வைக்கும் இந்த திட்டத்தை, எனது தொடர் கண்காணிப்பில் வைத்திருக்கிறேன்.

காதுகள் இல்லை

கேள்வி: கவர்னர்கள் அரசியலில் தலையிடக் கூடாது என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளதே…கவர்னர்கள் இதற்கு செவிமடுப்பார்கள் என நினைக்கிறீர்களா?

பதில்: இதுவரையிலான செயல்பாடுகளை பார்த்தால், கவர்னர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

கண்டனம்

தொடர்ந்து, பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

மணிஷ் சிசோடியா கைது கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சிகளை மறைமுகமாக இல்லை, வெளிப்படையாகவே மிரட்டுகிறது பா.ஜ.க. என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இது. பிரதமருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி இருக்கிறேன். எதிர்க்கட்சிகளை தேர்தல் மூலமாக வெல்லலாமே தவிர விசாரணை ஆணையங்கள் மூலமாக வெல்ல நினைக்க கூடாது.

வட மாநிலங்களில் தேர்தல் வியூகங்களின் மூலமாக வெற்றி பெற்றுள்ளது பா.ஜ.க. திரிபுராவில் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை திப்ரா மோத்தா கட்சி பிரித்து விட்ட காரணமாக காங்கிரஸ் - இடதுசாரிகள் அணி தோல்வியை தழுவி பா.ஜ.க.வை வெற்றி பெற வைத்துவிட்டார்கள்.

அருங்காட்சியகம்

கீழடி அருங்காட்சியகத்தை நேரில் சென்று பாருங்கள், இன்னும் பிரமிப்பாக இருக்கும். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் இருந்து, கீழடிக்காக தொடர்ந்து சட்டமன்றத்தில் - மக்கள் மன்றத்தில் பேசிக்கொண்டே இருந்தோம். எங்களுடைய தொடர் வற்புறுத்தலால்தான், அகழாய்வுப் பணியே நடந்தது. அங்கு அருங்காட்சியகம் அமையுங்கள் என்று தொடர் கோரிக்கை வைத்தேன். வெறும் அடிக்கல் மட்டும் நாட்டிவிட்டு, எந்த பணியையும் செய்யாமல் இருந்தார்கள். நாம் ஆட்சிக்கு வந்தவுடன்தான், அந்தப் பணியை விரைவுபடுத்தி, இப்போது முடித்திருக்கிறோம்.

உலகத் தமிழர் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது கீழடி வந்து பாருங்கள். இதேபோல் நெல்லையில் பொருநை அருங்காட்சியகமும் தயாராகி வருகிறது என்பதையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மாற்றம் வேண்டும்

பெண்கள் திருமணம் - குழந்தைகள் - குடும்பம் ஆகியவற்றோடு நிறைவடைந்துவிடாமல், சமூகப் பங்களிப்பை தங்கள் வாழ்நாள் முழுக்க செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். பெண்களுக்கு நான் சொல்வதைவிட, ஆண்களுக்கு ஒரு அறிவுரை சொல்ல நினைக்கிறேன். பெண்கள் குறித்த ஆண்களின் பார்வையில் மாற்றம் வேண்டும் - இதுதான் ஆண்களுக்கு நான் சொல்லும் அறிவுரை.

தமிழ்நாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காலம் காலமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்! அவர்களுக்கு எந்தக் காலத்திலும் பாதிப்பு இருந்தது இல்லை. ஆனால் சிலர் பொய்யான வீடியோக்களை தயாரித்து பொய்யைப் பரப்பி இருக்கிறார்கள். வடமாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகளே இதை செய்திருப்பது உள்நோக்கம் கொண்டதுதான்! பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியல் இயக்கங்கள் அகில இந்திய அளவில் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை, நான் எடுத்துக்கூறிய மறுநாளே, இப்படிப்பட்ட பொய் பரப்பப்பட்டதை கவனித்தீர்கள் என்றாலே, இதற்கு பின்னால் இருக்கும் சூழ்ச்சி புரியும்.

இந்தியா அடைந்த வளர்ச்சி

தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும், 'வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு' என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். தமிழ்நாடும் - தமிழர்களும் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் விரும்புகிறவர்கள். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' போன்ற உயர்ந்த சிந்தனை கொண்டவர்கள். இது இங்கிருக்கும் வட மாநில சகோதரர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

இந்தியாவை வளர்த்துள்ளோம்... வளர்த்துள்ளோம் என்று பா.ஜ.க சொல்வது எது தெரியுமா?. 2014-ம் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும்போது, ஒரு சிலிண்டரின் விலை 414 ரூபாய். இப்போது ஒரு சிலிண்டரின் விலை 1,118 ரூபாய் 50 பைசா. பா.ஜ.க. ஆட்சிக்கு வரும்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் 72 ரூபாய் 26 பைசா. இப்போது விலை 102 ரூபாய் 63 பைசா.

ஒரு லிட்டர் டீசல் விலை சென்னையில் 55 ரூபாய் 49 பைசா. இப்போது விலை 94 ரூபாய் 24 பைசா. பா.ஜ.க. ஆட்சிக்கு வரும்போது மத்திய அரசுக்கு இருந்த கடன் 54 லட்சம் கோடி ரூபாய். இப்போது இருக்கும் கடன் 147 லட்சம் கோடி ரூபாய். அதாவது மூன்று மடங்கு அதிகம்! இதுதான் பா.ஜ.க.வால் இந்தியா அடைந்த வளர்ச்சி.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.


Next Story