கவர்னர் மாளிகை அரசியல் பேசுவதற்கான இடமில்லை
கவர்னர் மாளிகை அரசியல் பேசுவதற்கான இடமில்லை என்று பாப்பாரப்பட்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.
கவர்னர் மாளிகை அரசியல் பேசுவதற்கான இடமில்லை என்று பாப்பாரப்பட்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.
பாதயாத்திரை
தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாப்பாரப்பட்டியில் 75-வது ஆண்டு சுதந்திர தின பவள விழா பாதயாத்திரை நேற்று நடந்தது. யாத்திரை தொடக்க விழாவுக்கு மாநில துணைத் தலைவர் தீர்த்தராமன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி ஜெய்சங்கர் வரவேற்றார். மாவட்ட நிர்வாகி நரேந்திரன், மாநில நிர்வாகி வீரமுணிராஜ், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில தலைவர் ரஞ்சன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் செங்கம் குமார், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு அங்குள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.
பேட்டி
அப்போது கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தி 11 ஆண்டுகளும், ஜவஹர்லால் நேரு 13 ஆண்டுகளும், காமராஜர் 9 ஆண்டுகளும் சிறை தண்டனை அனுபவித்துள்ளனர். தியாகி சுப்பிரமணிய சிவா தனது வாழ்நாள் முழுவதும் சுதந்திர போராட்டத்திற்கே தன்னை அர்ப்பணித்தார்.
இவ்வாறு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சக்கணக்கானோர் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உள்ளனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சுதந்திரத்திற்காக போராடி சிறைக்கு சென்றது கிடையாது. இப்போது வீடு தோறும் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுவது வரவேற்கத்தக்கது. இது நாள்வரை ஏன் அவர்கள் சுதந்திர விழாவை கொண்டாடவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
குறைந்தபட்ச ஆதார விலை
தமிழக கவர்னரை ரஜினிகாந்த் சந்தித்து அரசியல் குறித்து பேசியதில் தவறு இல்லை. ஆனால் எங்கு அரசியல் பேச வேண்டும் என்று மரபு உள்ளது. கவர்னர் மாளிகை அரசியல் பேசுவதற்கான இடமில்லை.
சமையல் எண்ணெய் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே நெல், கரும்பு, கோதுமை உள்ளிட்ட பயிர்களுக்கு வழங்குவதை போல் எண்ணெய் வித்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள், தொழிற்சங்க நிர்வாகிகள் தங்கவேல், சென்னகேசவன் மாவட்ட நிர்வாகிகள் வேடியப்பன், வடிவேல், சண்முகம், கிருஷ்ணன், பழனி, தர்மபுரி நகர தலைவர் செந்தில்குமார்
பாப்பாரப்பட்டி நகர தலைவர் சமதர்மம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பென்னாகரம் வட்டார தலைவர் சண்முகம் நன்றி கூறினார்.