சாலை வசதி குறித்து கோவிந்தசாமி எம்.எல்.ஏ. ஆய்வு
சாலை வசதி குறித்து கோவிந்தசாமி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி:-
தர்மபுரி- சேலம் மாவட்ட எல்லையில் ஏற்காடு மலையின் பின்புறம் ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாரமங்கலம் ஊராட்சியில் கோவிலூர், மேல் கோவிலூர், கேளையூர், கூத்துமுத்தல், மாரமங்கலம், மதூர், செந்திட்டு, சின்ன மதூர், காளிக்காடு, கொட்டசேடு, குட்டமாத்திக்காடு, மாவுத்து, நார்தஞ்சேடு, கொம்பு தூக்கி, அரங்கம், பெலாக்காடு ஆகிய 16 மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக பாப்பிரெட்டிப்பட்டியை நம்பியே உள்ளனர். ஆனால் அவர்கள் வந்து செல்ல போதுமான சாலை வசதி இல்லை. இதுகுறித்து கோவிந்தசாமி எம்.எல்.ஏ. விடம் முறையிட்டனர்.
இதையடுத்து கோவிந்தசாமி எம்.எல்.ஏ., பாப்பிரெட்டிப்பட்டி வெங்கடசமுத்திரம் கிராமத்தில் இருந்து ஏற்காடு இடையே உள்ள மலை கிராமங்களுக்கு சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சாலை அமைப்பது குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது மலை அடிவாரத்தில் உள்ள மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று உடனடியாக சாலை அமைப்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார். ஆய்வின் போது கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் நல்லதம்பி, ஒன்றிய செயலாளர் சேகர், நகர செயலாளர்கள் ராஜா, தென்னரசு மற்றும் வனத்துறையினர் உடன் இருந்தனர்.