அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளை பராமரிக்க ரூ.25 கோடி சிறப்பு நிதி: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல்
அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளை பராமரிக்க ரூ.25 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.
அமைச்சர் ஆய்வு
தேனி பங்களாமேட்டில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி ஆகிய இடங்களில் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், குன்னூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியை அவர் பார்வையிட்டு, மாணவ, மாணவிகளுடன் வாசிப்புத்திறன், எழுத்துத்திறன் குறித்து கலந்துரையாடினார்.
பின்னர் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நிருபர்களிடம் கூறுகையில், "தேனி பங்களாமேட்டில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி சேதம் அடைந்துள்ளது. அங்கு 2 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. குன்னூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
ரூ.25 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவ, மாணவிகள் விடுதிகளை பராமரிக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் விடுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. விடுதிகளில் காலியாக உள்ள இடங்களில் பப்பாளி, கீரை போன்றவற்றை பயிரிட்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போதிய இட வசதியுள்ள விடுதிகளில் விளையாட்டு அரங்குகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார். ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் முரளிதரன், எம்.எல்.ஏ.க்கள் சரவணக்குமார், மகாராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.