அரசு வக்கீல்களின் கட்டணம் 2 மடங்கு உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை வழங்கினார்


அரசு வக்கீல்களின் கட்டணம் 2 மடங்கு உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை வழங்கினார்
x

மாவட்ட கோர்ட்டு முதல் கீழ் கோர்ட்டுகள் வரை அரசு வழக்கை நடத்தும் வக்கீல்களுக்கு 2 மடங்கு கட்டண உயர்வு அளிக்கும் அரசாணையை மூத்த அரசு வக்கீல்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டின் கீழ் மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள், மாஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் கோர்ட்டுகள் இயங்கி வருகின்றன. இந்த கோர்ட்டுகளில் அரசு சார்பாக வழக்கை நடத்த அரசு வக்கீல்கள் பலர் நியமிக்கப்பட்டு, சுமார் 700-க்கும் மேற்பட்ட அரசு வக்கீல்கள் அரசு சார்பாக வழக்கை நடத்தி வருகின்றனர்.

இந்த கோர்ட்டுகளில் வழக்குகளை நடத்தும் அரசு வக்கீல்களின் கட்டண விகிதம் 1995-ம் ஆண்டிற்குப் பிறகு மாற்றி அமைக்கப்படாமல் இருந்தது. 2006-ம் ஆண்டு தி.மு.க. அரசு பதவியேற்றதும், அரசு வக்கீல்களின் கட்டண விகிதத்தை மாற்றி அமைக்க 2007-ம் ஆண்டு ஒரு குழுவை அமைத்து, அக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், 2011-ம் ஆண்டு கட்டண விகிதம் கணிசமாக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது. 2011-ஆம் ஆண்டிற்குப்பின், 10 ஆண்டுகாலம் கட்டண விகிதம் ஏதும் மாற்றி அமைக்கப்படவில்லை.

அரசு வக்கீல்களின் பங்களிப்பு மற்றும் பணிப்பளுவை கருத்தில் கொண்டு அவர்களது கட்டண விகிதத்தை மாற்றி அமைப்பது அவசியம் எனக் கருதி, அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகம்மது ஜின்னா அளித்த பரிந்துரை கடிதத்தை தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு அரசின் தலைமை வக்கீல் அனுப்பி வைத்தார். அதை அரசு கவனமுடன் பரிசீலித்து, தமிழ்நாடு அரசின் தலைமை வக்கீலின் பரிந்துரையின் அடிப்படையில், அரசு வக்கீல்களின் கட்டண விகிதத்தை இரு மடங்காக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அரசாணை வழங்கினார்

மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள், மாஜிஸ்திரேட்டு மற்றும் முன்சீப் கோர்ட்டுகளில் அரசு சார்பாக வழக்கை நடத்தும் அரசு வக்கீல்களின் கட்டண விகிதத்தை இரு மடங்காக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விழுப்புரம் மாவட்ட அரசு குற்றவியல் வக்கீல் சுப்ரமணியன், சென்னை மாநகர குற்றவியல் அரசு வக்கீல் தேவராஜன், ராமநாதபுரம் மாவட்ட அரசு குற்றவியல் வக்கீல் கார்த்திகேயன் மற்றும் சென்னை மாநகர உரிமையியல் அரசு வக்கீல் ஷாஜகான் ஆகியோரிடம் வழங்கினார். இதனால் ஐகோர்ட்டு தவிர்த்த அனைத்து கோர்ட்டுகளில் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை நடத்தும் அனைத்து அரசு வக்கீல்களும் பயன் பெறுவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் அமுதா, அரசு தலைமைக் குற்றவியல் வக்கீல் அசன் முகம்மது ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story