அன்னியூரில் அரசு கலைக்கல்லூரி அமைத்து தர வேண்டும்


அன்னியூரில் அரசு கலைக்கல்லூரி அமைத்து தர வேண்டும்
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அன்னியூரில் அரசு கலைக்கல்லூரி அமைத்து தர வேண்டும் என்று சட்டசபையில் புகழேந்தி கோரிக்கை விடுத்தாா்.

விழுப்புரம்

தமிழக சட்டசபையில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி பேசியதாவது:-

விக்கிரவாண்டி தொகுதியில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் கல்லூரியில் படிக்க 30 கிலோ மீட்டர் தூரமுள்ள விழுப்புரம் அரசு கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். எனவே மாணவர்களின் நலன் கருதி காணை ஒன்றியம் அன்னியூரில் அரசு கலைக் கல்லூரி அமைத்து தர வேண்டும்.

முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பையூர், மாரங்கியூர், கொங்கராயனுர், ஆகிய 3 ஊராட்சிகள் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன. இந்த ஊராட்சிகளை திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் சேர்க்க வேண்டும்.

மேம்பாலம் தேவை

காணை ஒன்றியம் பனமலை ஈசா ஏரியை நீர் தேக்கமாகவும், மேல்பாதியில் பம்பை ஆற்றின் குறுக்கே தடுப்பணையும், கல்பட்டு, பனமலைபேட்டையில் ஆரம்ப சுகாதார நிலையமும் அமைத்து தர வேண்டும்.

முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியர் விடுதி கட்டிடம் வி.சாலையில் கட்ட ரூ.4 கோடியே 10 லட்சம் நிர்வாக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பணியை நிறைவேற்றி தர வேண்டும்.

விக்கிரவாண்டி பேரூராட்சி அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதால் மேம்பாலம் அமைத்து தர வேண்டும்.

விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். இதில் மாணவிகளை மட்டும் பிரித்து அதே பேரூராட்சியில் உள்ள மகளிர் உயர்நிலைப் பள்ளியை மகளிர் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

இவ்வாறு நா.புகழேந்தி எம்.எல்.ஏ. பேசினார்.


Next Story