அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் பணியிடை நீக்கம்


அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் பணியிடை நீக்கம்
x

ஆரணியில் குழந்தைகளுடன் பெண்ணை இறக்கி விட்ட அரசு பஸ் கண்டக்டர், டிரைவரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியில் குழந்தைகளுடன் பெண்ணை இறக்கி விட்ட அரசு பஸ் கண்டக்டர், டிரைவரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

பஸ்சில் இருந்து இறக்கி விட்டனர்

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி ஜெயப்பிரியா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண், கைக்குழந்தை என 2 பெண் குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி ஜெயப்பிரியாவுக்கு உடல் நலம் சரியில்லாததால் ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்திருந்தார்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்புவதற்காக ஆரணியில் இருந்து வாழைப்பந்தல் செல்லும் அரசு பஸ்சில் சென்றார். அந்த பஸ் மேல்புதுப்பாக்கம் பகுதிக்கு சென்றதும் அனைத்து பயணிகளும் இறங்கி விட்டனர்.

ஜெயப்பிரியா மட்டும் குழந்தைகளுடன் இருந்தார். அதனால் அவரை அங்கேயே கண்டக்டர், டிரைவர் இறங்கிவிடும்படி கூறியதாக தெரிகிறது.

அதற்கு அவர் இங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரம் குழந்தைகளுடன் நான் தனியாக செல்ல முடியாது என்றார். இதையடுத்து அவரை மீண்டும் ஆரணிக்கு கொண்டு வந்து பஸ் நிலையத்தில் கண்டக்டரும், டிரைவரும் இறக்கி விட்டனர்.

பஸ் சிறைபிடிப்பு

அப்போது பஸ் நிலையத்தில் ஜெயப்பிரியா மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆசுவாசப்படுத்தி வேறு பஸ்சில் ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

நீண்டநேரம் கழித்து ஜெயப்பிரியா வீடு திரும்பி வந்து நடந்த விவரங்களை கூறினார். இதனால் அன்று இரவு வாழைப்பந்தலுக்கு வந்த அரசு பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர். சுமார் 2 மணி நேரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபின்னர் பஸ் விடுவிக்கப்பட்டது.

பணியிடை நீக்கம்

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ப.முருகேஷ் விசாரணை நடத்தினார்.

இதையடுத்து பஸ்சில் இருந்து ஜெயப்பிரியா மற்றும் 2 பெண் குழந்தைகளை நடுவழியிலேயே இறங்க கூறிய கலவை பகுதியை சேர்ந்த டிரைவர் சண்முகம், மேல் சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கண்டக்டர் சீனிவாசன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.


Next Story