அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் நடத்தப்படும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு தி.மு.க.வினரால் பத்து லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
2022ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் பொது விளம்பரம் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில், பொதுத் துறை நிறுவனங்கள் பணியாளர்களை நியமிக்கும் கடுமையான பணியிலிருந்து விடுபட்டு தங்களுடைய முக்கியப் பணியில் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள் மற்றும் அமைப்புகளில் காலியாக உள்ள சில பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதனை நிறைவேற்றும் வகையில் 07-01-2022 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (கூடுதல் செயற்பணிகள்) சட்டமுன்வடிவு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டு இருக்கிறது.
மேற்படி சட்டம் இயற்றப்பட்டு ஒன்றரை ஆண்டு காலம் கடந்துள்ள நிலையில், பெரிய அளவில் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படவில்லை என்பது வேதனை அளிக்கும் செயலாகும். தற்போது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், இந்தப் பணியிடங்கள் ஒளிவுமறைவின்றி நேர்மையான முறையில் நடத்தப்படுமா என்ற சந்தேகம் இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்குக் காரணம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், இதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்காததும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதற்காக மிகப் பெரிய வசூல் வேட்டை தி.மு.க.வினரால் நடத்தப்படுவதும்தான்.
ஒட்டுநர் மற்றும் நடத்துநர் பயிற்சிக்கான உரிமங்களைப் பெற்று, போதிய அனுபவத்துடன் இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், தன்னுடைய நிலைப்பாட்டினை அறிவிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசாங்கத்திற்கு உள்ளது. ஒட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் நடத்தப்பட்டால் அது ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேர்மையாக நடத்தப்பட வேண்டுமென்றும் இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இளைய சமுதாயத்தினரின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இதர பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்மூலம் நடத்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.